UPDATED : ஏப் 12, 2024 03:15 AM
ADDED : ஏப் 12, 2024 12:44 AM

வட கிழக்கு மாநிலமான மிசோரமில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன் தலைவர் லால்துஹோமா முதல்வராக பதவியேற்றார். இந்த மாநிலம், நம் அண்டை நாடான மியான்மருடன் எல்லையை பகிர்ந்துள்ளது.
மிசோரமில் உள்ள ஒரேயொரு லோக்சபா தொகுதிக்கு, வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இத்தொகுதியில், ஆளும் ஜோரம் மக்கள் இயக்கம் சார்பில் ரிச்சர்டு வன்லால்மங்கைஹா, எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி சார்பில் ராஜ்யசபா எம்.பி., கே.வான்லால்வேனா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், காங்., சார்பில் லால்பியாக்ஜாமா, பா.ஜ., சார்பில் வன்லால்முகா, மிசோரம் மக்கள் மாநாடு சார்பில் ரீட்டா மல்சாமி ஆகியோர், இத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இதனால், மிசோரம் தனித்தொகுதியில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. ஐந்து முனை போட்டி என்றாலும், ஜோரம் மக்கள் இயக்கம் - மிசோ தேசிய முன்னணி இடையே தான் போட்டி என, அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள ஆளும் ஜோரம் மக்கள் இயக்கம், லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் உள்ள ஒரேயொரு தொகுதியில் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. இதனால், பா.ஜ., - காங்., ஆகிய கட்சிகளிடம், அக்கட்சி இடைவெளியை கடைப்பிடித்து வருகிறது.
இது குறித்து, ஜோரம் மக்கள் இயக்கம் தலைவரும், மிசோரம் முதல்வருமான லால்துஹோமா கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால், பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணியிலோ அல்லது காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணியிலோ அங்கம் வகிக்க மாட்டார். பார்லி.,யில் மிசோரம் பிரச்னைகளை மட்டுமே அவர் குரல் கொடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
மிசோரம் - மியான்மர் எல்லையில், வேலி அமைக்கும் மத்திய பா.ஜ., அரசின் முடிவுக்கு, சோரம் மக்கள் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வேலி அமைப்பது, மிசோரம் பழங்குடியினருக்கும், மியான்மரில் வசிக்கும் அவர்களின் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையேயான பாரம்பரிய உறவை சீர்குலைக்கும் என அக்கட்சி உறுதியாக நம்புகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

