'ஜீரோ வேஸ்ட்' தொழில்நுட்பத்தில் பவுண்டரி கழிவு மறுசுழற்சி: சுற்றுச்சூழல் பிரச்னைக்கு அசத்தல் தீர்வு
'ஜீரோ வேஸ்ட்' தொழில்நுட்பத்தில் பவுண்டரி கழிவு மறுசுழற்சி: சுற்றுச்சூழல் பிரச்னைக்கு அசத்தல் தீர்வு
ADDED : செப் 15, 2024 06:31 AM

கோவை: இயந்திர தொழில்துறையின் தாய் என புகழப்படுவது வார்ப்படத் தொழிலான பவுண்டரி. வாகன உதிரிபாகங்கள் முதல் தொழிற்சாலை இயந்திரங்கள், பம்ப், வால்வ், வேளாண் கருவிகள், ரயில்வே, மின்சாரம் என, எந்தெந்தத் துறைகளிலெல்லாம் இயந்திரப் பயன்பாடு இருக்கிறதோ, அந்தத் துறைகளுக்கு, இயந்திரம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் பவுண்டரி தொழிற்சாலைகளில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.
பவுண்டரி தொழிலில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 4,500 பவுண்டரிகள் உள்ளன. கோவையில், 650 பவுண்டரிகள் உள்ளன. பவுண்டரி தொழிலில் சிலிக்கா எனப்படும் மணல், மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
கழிவு பிரச்னை
இந்த மணல் பயன்படுத்தப்பட்ட பிறகு, கழிவாக மாறுகிறது. இக்கழிவை, முறையாக அப்புறப்படுத்துவது பெரும் பிரச்னையாக உள்ளது. ரோட்டோரங்களிலும், விவசாய நிலங்களிலும் கொட்டப்படும் இக்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டை விளைவிக்கின்றன.
மழை பெய்யும்போது, இக்கழிவுகளுடன் கலக்கும் நீர், கரு நிறத்தில் மாறுகிறது; நிலத்தடி நீர் மாசுபட்டு, டி.டி.எஸ்., 1,500 முதல் 4,000 வரை செல்கிறது. இதனால், கால்நடைகள் பாதிப்பு, மண் வளம் பாதிப்பு உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
புதிய தொழில்நுட்பம்
இந்த பவுண்டரி கழிவுகளைச் சுத்திகரித்து, மறுபயன்பாடுக்கு அனுப்புவதோடு, கழிவுகளை வேறு பொருட்களாக மாற்றி, ஜீரோ கழிவுகளாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறார், கோவை, 'அம்மாருண் என்விரோகார்டு' நிறுவன இயக்குனர் விஸ்வநாதன்.
இதுதொடர்பாக, 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், பவுண்டரி கழிவுகளைக் கையாள்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதற்கான தொழிற்சாலையை நிறுவி, 2015 முதல் செயல்படுத்தி வருகிறேன்.
ஸ்டீல் பவுண்டரி, அயர்ன் பவுண்டரி என, இரு வகை பவுண்டரிகள் உள்ளன. கோவையில் உள்ள 650 பவுண்டரிகளில், 500 பவுண்டரிகள் அயர்ன் பவுண்டரிகள். இங்கிருந்து வெளிவரும் மணல், கருப்பு நிறத்தில் இருக்கும். இக்கழிவை செங்கல் தயாரிப்பில் பயன்படுத்தும் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம்.
மிச்சமாகும் செம்மண்
செம்மண்ணுடன், 15 சதவீதம் அயர்ன் பவுண்டரி கழிவைச் சேர்த்து, செங்கல் தயாரிக்கிறோம். இது, வழக்கமான செங்கல்லை விட உறுதியானது. இதுவரை, 15 கோடி செங்கற்களைத் தயாரித்துள்ளோம். இதனால், 1.5 லட்சம் டன் செம்மண் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது, ஸ்டீல் பவுண்டரி கழிவு; வெள்ளை நிறத்தில் கட்டி கட்டியாக இருக்கும். இக்கழிவை, நீரால் சுத்திகரிக்கிறோம். இதை மீண்டும் பயன்படுத்தலாம். 50 முறை மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடியும். இதுவரை, 4 லட்சம் டன் கழிவு மணலை சுத்திகரித்திருக்கிறோம்.
தொழில்முனைவோருக்கு லாபம்
ஒரு டன் புது மணல், 4,000 முதல் 4,500 ரூபாய் வரை ஆகிறது. சுத்திகரித்த மணலை, 2,500 ரூபாய்க்கு தருகிறோம். இதனால், தொழில்முனைவோருக்கு பெரும் லாபம் கிடைக்கிறது.
இந்த சுத்திகரிப்புப் பணியின்போது, 2 முதல் 5 சதவீதம் வரை கழிவு வரும். சிட்டம் கழிவை சிமென்ட் ஆலைகளுக்குக் கொடுத்து விடுவோம்.
சோடியம் குளோரைடு கழிவை, சாய நிறுவனங்களுக்குக் கொடுத்து விடுவோம். இந்த, 'ஜீரோ வேஸ்டேஜ்' தொழில்நுட்பம், உலகில் வேறெங்கும் இல்லை. முதன்முதலில் கோவையில் தான் உருவாக்கி பயன்படுத்தி வருகிறோம். எங்கள் தொழிற்சாலையில், மாதத்துக்கு 10,000 டன் கழிவு மணலை சுத்திகரிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.