காகித விலையை காரணம் காட்டி பாடப்புத்தகங்கள் விலையை உயர்த்தலாமா?
காகித விலையை காரணம் காட்டி பாடப்புத்தகங்கள் விலையை உயர்த்தலாமா?
ADDED : ஆக 15, 2024 05:48 AM

சென்னை : பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:
பழனிசாமி:
அரசு பாடத் திட்டத்தில் படிக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விலையை, 40 சதவீதம் உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது. இது தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களையும் பாதிக்கும். தற்போது உயர்த்தப்பட்டுள்ள, பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வை, உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும்.
பன்னீர்செல்வம்:
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்கள் விலையை, தி.மு.க., அரசு உயர்த்தி உள்ளது. காகித விலை, அச்சிடும் கட்டணம் உயர்வு என, காரணம் தெரிவித்தாலும், 48 கோடி ரூபாய் செலவழித்து, கார் பந்தயம் நடத்தும் அரசுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அனைவருக்கும் கல்வியை இலவசமாக தர முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் புத்தகங்களையாவது இலவசமாக தர அரசு முயற்சி செய்ய வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால், விலையையாவது ஏற்றாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.