வெற்றி பெற்றால் மணல் ஒப்பந்தம் ரத்து: எச்சரித்த ஆளுங்கட்சி; அடங்கிய அ.தி.மு.க.,
வெற்றி பெற்றால் மணல் ஒப்பந்தம் ரத்து: எச்சரித்த ஆளுங்கட்சி; அடங்கிய அ.தி.மு.க.,
ADDED : ஏப் 22, 2024 04:39 AM

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் தமிழகம் முழுதும் நடந்திருக்கிறது. தமிழகத்தின் பிரதான மூன்று கூட்டணிகளான தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., ஆகியவை, பல தொகுதிகளிலும் பணத்தை தாறுமாறாக வாரி வழங்கி உள்ளன.
முரண்பாடு
திருச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையா, ஓட்டுக்கு 1,000 ரூபாய் வரை கொடுக்கத் தயாரான நிலையில், ஆளுங்கட்சியின் திடீர் உத்தரவால், கடைசி நேரத்தில் பணம் கொடுப்பதை கைவிட்டதாக, திருச்சி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இதுகுறித்து, திருச்சி அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது: திருச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க.,வுக்கு ஓரளவு சாதகமான தொகுதி. அங்கு, அமைச்சர் நேரு செல்வாக்குடன் இருப்பதால், அவர் ஆசி இருப்பவரே வெற்றி பெறுகிறார். அதனால், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு, தி.மு.க., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., திருச்சி தொகுதியை போராடி பெற்றது.
கட்சியின் பொதுச்செயலர் வைகோ, தன் மகன் துரையை வேட்பாளர் ஆக்கினார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க., வலியுறுத்தியது. ஆனால், சுயேச்சை சின்னத்தில் தான் போட்டி என்று கூறி, தீப்பெட்டி சின்னத்தில், துரை போட்டியிட்டார்.
இதில், தி.மு.க.,வினரோடு முரண்பாடு ஏற்பட்டது. கடைசி நேரத்தில் அமைச்சர் நேருவுடன் ஏற்பட்ட உடன்பாட்டால், துரை வெற்றிக்காக தி.மு.க.,வினர் பாடுபட்டனர். கடைசி நேரத்தில் ஓட்டுக்கு, 250 ரூபாய் கொடுக்க, தி.மு.க., முடிவு செய்தது.
இதையறிந்த அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையா, 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரை கொடுக்க முடிவெடுத்தார்; அதற்காக பணமும் தயாரானது. இந்த தகவல், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கும் போனது. கோபமான அவர்கள், நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனை அழைத்து, கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சம்
'தமிழகம் முழுதும் ஆற்று மணல் எடுத்து வியாபாரம் செய்யும் ஒப்பந்தம் பெற்று தொழில் நடத்தும் கரிகாலனின் சகோதரர் கருப்பையா, நம் ஆதரவில் சம்பாதித்த பணத்தை கொடுத்து, நம் கூட்டணி கட்சி வேட்பாளரையே தோற்கடிப்பாரா? அப்படி செய்தால், தேர்தல் முடிந்ததும், மணல் ஒப்பந்தத்தை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுத்து விடுவோம் என எச்சரித்து விடுங்கள்' என கூறியுள்ளனர்.
இதையடுத்து, கரிகாலனை அழைத்துப் பேசிய துரைமுருகன், 'திருச்சி தொகுதியில் கருப்பையா சார்பில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது' என, எச்சரித்து உள்ளார். தேர்தல் வெற்றியைக் காட்டிலும், தொடர்ச்சியான மணல் வியாபாரம் தான் பெரிசு என முடிவெடுத்த கருப்பையா குடும்பத்தினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் இருந்து, கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டனர்.
இதனால் நல்ல வாய்ப்பு இருந்தும், கடைசி நேரத்தில் வெற்றியை துரையிடம் விட்டுக் கொடுத்து விட்டனரோ என்ற அச்சம், அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும், கட்சி கட்டமைப்பும், சமூக பின்புலமும் கருப்பையாவுக்கு இருப்பதால், எல்லாவற்றையும் மீறி வெற்றி பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

