காவிரியில் கரைபுரளும் வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்து பாதிப்பு
காவிரியில் கரைபுரளும் வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்து பாதிப்பு
UPDATED : ஆக 02, 2024 04:54 AM
ADDED : ஆக 02, 2024 04:45 AM

கர்நாடக அணைகளில் திறந்து விடப்படும் உபரிநீரால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை, 6:00 மணிக்கு, 2.10 லட்சம் கன அடி உபரிநீர் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சத்திரம், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதி குடியிருப்புக்களை நீர் சூழ்ந்தது.
மேட்டூர் அணை முழுதுமாக நிரம்பியதால், அணைக்கு வரும், 1.70 லட்சம் கன அடி உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் - இடைப்பாடி சாலை மூழ்கி, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையை சுற்றியுள்ள தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், வ.உ.சி., நகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட காவிரிக்கரையை ஒட்டிய நெரிஞ்சிபேட்டை, அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி, இழுப்புதோப்பு, வடக்கு தெரு, குலவிளக்கு அம்மன் கோவில், கொளாநல்லி போன்ற பல பகுதிகளில் வீடுகளை காவிரி ஆற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
ஆற்றை ஒட்டிய, 30 கிராமங்களில், 18 கிராமங்கள் உபரி நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மக்கள் தங்க, 77 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை வரை எட்டு முகாமில், 65 குடும்பங்களை சேர்ந்த, 157 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
சங்ககிரி, தேவூர் அருகே காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மதிக்கிழான்திட்டு, மணக்காடு பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. காவேரிப்பட்டி பரிசல் துறையில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில், ராகு, கேது கோவில், கம்பத்தையன் கோவில்களையும் தண்ணீர் சூழ்ந்தது. கல்வடங்கம், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அன்னமார் கோவில் பகுதிக்கு செல்லும், சரபங்கா ஆற்றுப்பாலம் மூழ்கியது.
இதனால் இடைப்பாடியில் இருந்து வட்ராம்பாளையம் வழியே குமாரபாளையம் செல்லும் அரசுபஸ்கள், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங் கம் பகுதிகளில் இருந்து அன்னமார் கோவில் பாலம் வழியே குமாரபாளையம், பவானி செல்லும் அரசு டவுன் பஸ்கள், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இப்பகுதிகளில், 500 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் முழ்கின
- நமது நிருபர் குழு -.