sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

200 'சீட்' கனவில் மண் அள்ளிப் போட்டுக் கொண்ட தி.மு.க.,! மக்காச்சோளத்துக்கு 'செஸ்' விதிப்பு; விவசாயிகள் கொந்தளிப்பு!

/

200 'சீட்' கனவில் மண் அள்ளிப் போட்டுக் கொண்ட தி.மு.க.,! மக்காச்சோளத்துக்கு 'செஸ்' விதிப்பு; விவசாயிகள் கொந்தளிப்பு!

200 'சீட்' கனவில் மண் அள்ளிப் போட்டுக் கொண்ட தி.மு.க.,! மக்காச்சோளத்துக்கு 'செஸ்' விதிப்பு; விவசாயிகள் கொந்தளிப்பு!

200 'சீட்' கனவில் மண் அள்ளிப் போட்டுக் கொண்ட தி.மு.க.,! மக்காச்சோளத்துக்கு 'செஸ்' விதிப்பு; விவசாயிகள் கொந்தளிப்பு!

4


UPDATED : மார் 03, 2025 09:45 AM

ADDED : மார் 03, 2025 07:15 AM

Google News

UPDATED : மார் 03, 2025 09:45 AM ADDED : மார் 03, 2025 07:15 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்காச்சோளத்துக்கு 1 சதவீத சந்தை வரியை, வேளாண் விற்பனைத் துறை மூலம் விதித்திருப்பது, விவசாயிகளை கடும் அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது.

பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, அதிகரித்துள்ள லஞ்சம், போக்சோ குற்றங்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் தி.மு.க., அரசுக்கு தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்க, ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர் அமைப்புகளின் அதிருப்தியும், தி.மு.க.,வுக்கு எதிராக இருக்கிறது. போதாக்குறைக்கு, தேன் கூட்டில் கல்லெறிந்த கதையாக, இப்போது விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது தி.மு.க., அரசு.

சந்தை வரி


தமிழகத்தில் 40 விதமான வேளாண் விளை பொருட்களுக்கு, ஒரு சதவீத சந்தை வரி (செஸ்) விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 'அறிவிக்கை' செய்யப்பட்ட வேளாண் பொருட்களுக்கு, அதன் விற்பனை மதிப்பில் ஒரு சதவீத சந்தை வரி விதிக்கப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில், மக்காச்சோளத்துக்கு 'செஸ்' வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த டிச., 17ம் தேதி முதல் நாமக்கல், சேலம், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நெல்லை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில், மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத செஸ் வசூலிக்க, வேளாண் உற்பத்திப் பொருட்கள் துறை உத்தரவிட்டுள்ளது.

இதில் பெரும்பாலான மாவட்டங்களில், மக்காச்சோள விவசாயிகள் பரிதாப நிலையில் உள்ளனர். இந்த வரிச்சுமையை வர்த்தகர்கள், விவசாயிகளுக்குத் தர வேண்டிய பணத்தில் கழித்துக் கொள்வர் என்பதால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே, மக்காச்சோளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. அதிலும் மானாவாரிதான் அதிகம். விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உற்பத்தித் திறன் வெகுவாகக் குறைவு; ஏக்கருக்கு 1 முதல் 1.8 டன் சராசரி உற்பத்தித் திறன். மக்காச்சோள சாகுபடியில் போதிய லாபம் இல்லாத நிலையிலும், வேறு வழியின்றி பயிரிடுகின்றனர்.

லஞ்சத்துக்கு வழி


வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, தமிழக அரசு 'செஸ்' விதித்துள்ளது. விவசாயிகள் 'செஸ்' செலுத்த வேண்டியதில்லை என்றாலும், வியாபாரிகள் அந்தத் தொகையை எங்களிடம்தான் பிடித்தம் செய்கின்றனர். இதனால் கிலோவுக்கு 25 பைசா வரை நஷ்டம் ஆகிறது.

விவசாயிகள் அறுவடைக்குப் பின், களத்தில் இருந்து தங்களது குடோனுக்கு வாகனத்தில் கொண்டு சென்றாலும், அதிகாரிகள் வழிமறித்து மிரட்டுகின்றனர். இதனால், அவர்களைக் 'கவனிக்க' வேண்டியுள்ளது. அரசுக்கு வருவாய் செல்கிறதோ இல்லையோ, அதிகாரிகளின் பாக்கெட் நிரம்புகிறது.

பணம், நேரம் விரயம்


'செஸ்' செலுத்த மாலை 5:00 மணிக்கு மேல், அரசு அலுவலகம் சென்றால் அதிகாரிகள் இருப்பதில்லை என்பதால், இரவில் மக்காச்சோள லோடு ஏற்றிக் கொண்டு வாகனம் செல்ல முடியாது.

ஒரு நாள் தாமதித்தால், விலை இறங்கி விடவும் வாய்ப்பு உள்ளது. இந்த இழப்பை வியாபாரிகள், எங்கள் தலையில்தான் கட்டுவர். முந்தைய காலகட்டங்களில் 'வாட்' வரி விதிப்பின் போது, ரோட்டோரத்தில் நிறுத்தி, வசூல் வேட்டை நடந்ததைப் போல, தற்போது 'செஸ்' என்ற பெயரில் வசூல் வேட்டையில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.

இறுதிப் பொருள் மீது வரி


மக்காச்சோளம் கோழித் தீவனம், கால்நடைத் தீவனம், ஸ்டார்ச், எத்தனால் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனங்களின் இறுதி உற்பத்திப் பொருள் மீது, ஜி.எஸ்.டி., விதிக்கப்படும் நிலையில், மத்திய அரசிடம், ஜி.எஸ்.டி., பங்கை சேர்த்து வாங்கிக் கொள்ளலாமே.

எப்.பி.ஓ.,க்களும் தப்பவில்லை


எப்.பி.ஓ.,கள் எனப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விவசாயிகளால், விவசாயிகளுக்காக நடத்தப்படுபவை. இந்த அமைப்புகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, விற்பனை செய்தாலும் செஸ் விதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை.

மக்காச்சோளத்தின் மீதான 'செஸ்' வாயிலாக, அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.20 ---- 25 கோடி வருவாய் கிடைத்தாலே பெரிது. ஆனால், இதுதொடர்ந்தால், விவசாயிகளுக்குத்தான் நஷ்டம். எனவே, இவ்விஷயத்தில் துறை அமைச்சர், முதல்வர் தலையிட்டு உடனடியாக மக்காச்சோளத்தின் மீதான 'செஸ்' ரத்து செய்ய, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சியா


கோழித்தீவனம், எத்தனால் உற்பத்திக்காக மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு 14 முதல் 20 லட்சம் டன் வரை மக்காச்சோளம் பற்றாக்குறைாக உள்ளது. மக்காச்சோள உற்பத்தியை அதிகரித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் நாம் உள்ளோம். மாநில அரசும் ரூ.30 கோடியை பட்ஜெட்டில் பிரத்யேகமாக ஒதுக்கி உள்ளது. ஒருவேளை அரசுக்கு விவசாயிகள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு சில அதிகாரிகள் இந்த செஸ் 'ஐடியா'வை செயல்படுத்தியிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.



தி.மு.க., பாடம் கற்க வேண்டும்


மத்திய பா.ஜ., அரசு, விவசாயிகளின் போராட்டத்தை, அவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டதன் பலனை, கடந்த லோக்சபா தேர்தலில் அனுபவித்தது.
விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடந்த, உ.பி.,யின் மேற்குப் பகுதி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானின் வடக்குப் பகுதி, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் 38 எம்.பி., சீட்களை பா.ஜ., இழந்தது. தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. சில இடங்களில் தொகுதிக்குள் சென்று ஓட்டுக் கேட்கவே முடியவில்லை. அந்தப் பாடத்தில் இருந்து தி.மு.க., கற்றுக் கொள்ள வேண்டும்.
இங்கும் விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர். பெரும் போராட்டம் வெடிக்கலாம். சட்டம் ஒழுங்கு மோசமடையும் அளவுக்கு மக்காச்சோள வாகனங்களைக் கொண்டு டோல்கேட்களை இடித்து விட்டு, பெரும் பேரணியாகச் செல்லும் கொந்தளிப்பான மனநிலையில் விவசாயிகள் உள்ளனர். சட்டசபைத் தேர்தலின்போது, இப்பிரச்னை பூதாகரமாக வெடிக்கும். தி.மு.க., 200 தொகுதிகளில் வெல்வது என்பது, பகல் கனவாகிவிடும்.



உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!


ஒரு சதவீத வரி என அரசு அறிவித்துவிட்டாலே, அது விவசாயிக்கான விலையில் தான் கை வைக்கப்படுகிறது என்பது நிச்சயம். வியாபாரிகள் அந்தத் தொகையை ஒன்றுக்கு இரண்டாக விவசாயிகளிடம் தான் வசூலிப்பர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழுங்காக செயல்பட்டால், விவசாயிக்கு நன்மை. ஆனால், அது நடப்பதில்லை. இடைத்தரகரின்றி மக்காச்சோளத்தை நாபெட் கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு சதவீத 'செஸ்' உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.

Image 1387455

ராஜா சிதம்பரம், மாநில செயலாளர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்

'முதல்வர் நல்ல முடிவெடுப்பார்'


மாநில அரசு விதித்த 1 சதவீத செஸ் என்பதை, வியாபாரிகள், விவசாயிகளின் அடிப்படையில்தான் பிடித்தம் செய்வர். சராசரி மழை குறைவு, மகசூல் குறைவு காரணமாக விவசாயிகளுக்கு லாபம் இல்லாத நிலையில், இந்த செஸ் மேலும் இழப்பையே தரும்.

இந்த சந்தை வரியை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். அவர் நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம்.

Image 1387456

வாரணவாசி ராஜேந்திரன், மாநில செயலாளர், இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு

'சாகுபடியைக் கைவிட வேண்டியதுதான்'


விளைகின்ற கொஞ்ச நஞ்சம் மக்காச்சோளத்துக் கும் வரி விதிக்கிறீர்கள். வறட்சி, பன்றி தாக்குதல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பு. வரி விதிப்பு விவசாயிக்கு கூடுதல் சுமை.

மக்காச்சோளத்தின் விலை அதிகமாக இருந்து, அதில் கொஞ்சம் வரி எடுத்தால் பரவாயில்லை. அடிமாட்டு விலைக்குப் போகும் நிலையில், இந்த வரியால் விலை குறையும். நிறுவனங்களுக்கு விலை அதிகரிக்கும்.

ஆள் கூலி, பூச்சிக் கொல்லி, டிராக்டர் உழவு, விதை என எல்லாவற்றுக்கும் செலவு செய்துவிட்டு, வரியும் எங்கள் தலையில் விடிந்தால், மக்காச்சோளத்தை எதற்குப் பயிரிட வேண்டும் என்ற மனநிலை வந்துவிடும்.

Image 1387457

வேல்முருகன், விவசாயி மங்கூன், ஆலத்தூர்

வர்த்தகர்களுக்கு என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன?


செல்வம், பெரம்பலூர்


Image 1387458

விவசாயியிடம் இருந்து ஒரு வியாபாரி, அவரிடம் இருந்து மற்றொரு வியாபாரி, ஒரு ஸ்டாக்கிஸ்ட், பின் வேறொரு வியாபாரி, இறுதியாக நுகரும் நிறுவனம் இப்படி பல கட்டங்களில் மக்காச்சோளம் விற்பனை செய்யப்படும்போது, ஒரே பொருளுக்கு பல இடங்களில் வரி விதிக்கப்படும் சூழல் உள்ளது.

ஒரு வர்த்தகர் மற்றொரு வர்த்தகருக்கு, விற்பனை பில் போடுகிறார்; வரி விதிக்கப்படுகிறது. வாங்கியவர் நிறுவனத்துக்கு விற்பனை செய்யும்போது, அந்நிறுவனம், அந்தக் குறிப்பிட்ட வர்த்தகரின் பெயரில் அசல் செஸ் பில் காட்டினால்தான், சரக்கை இறக்கவே அனுமதிக்கும். இதனால், அவர் மீண்டும் கட்ட முடியுமா?

விவசாயிகளிடம் ஓரிடத்தில் பாதி லோடு, மற்றொரு கிராமத்தில் பாதி என ஏற்ற வேண்டியிருக்கும். இடைப்பட்ட பயணத்தில், அதிகாரிகள் பிடித்தால் அபராதம் விதிக்கின்றனர். எடைமேடையில் எடை போடாமல், பில் உருவாக்க முடியாது. அந்த இடைப்பட்ட தூரத்தில் பிடித்தாலும் சிக்கல்தான். இரவு நேரங்களில், அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாதபோது, செஸ் எப்படி கட்டுவது. ஆன்லைனில் இந்த வசதி கிடையாது.

கர்நாடகாவில், 0.6 சதவீத செஸ்; ஆன்லைனில் செலுத்தலாம். பல்வேறு காரணங்களால் 'ரிஜக்ட்' செய்யப்பட்டால், ரிஜக்ட் பில் வைத்து, செஸ் 'கிளெய்ம்' செய்யலாம். தமிழகத்தில் அது முடியாது.'செஸ்' காரணமாக, விவசாயிகளுக்கும் இழப்பு, வர்த்தர்களுக்கும் நடைமுறைச் சிக்கல். எனவே, தமிழக முதல்வர், மக்காச்சோளத்துக்கான சந்தை வரியை ரத்து செய்ய வேண்டும்.

குணசேகரன், பல்லடம்


Image 1387459

30 டன் மக்காச்சோளத்தை அனுப்பி, ஈரப்பதம் காரணமாக, 25 டன் ரிஜக்ட் செய்யப்பட்டால், அதை கொண்டு வந்து உலர வைத்து மீண்டும் அனுப்புகிறோம். அந்த 25 டன்னுக்கு மீண்டும் வரி கட்ட வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் செஸ் வரி எப்படி செலுத்துவது? வரி கட்டிய வாகனம் பழுதடைந்தால், வேறு வாகனத்தில் மாற்றி கொண்டு செல்ல நேரிட்டால், மீண்டும் வரி செலுத்த வேண்டும். இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ள நிலையில், இந்த செஸ் ரத்து செய்யப்பட்டால், வர்த்தகர்கள், விவசாயிகள் என இருதரப்புக்கும் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்.

-நமது நிருபர்-






      Dinamalar
      Follow us