இந்தியாவுக்கு எதிராக இலங்கை மீனவர்களை துாண்டும் சீனா
இந்தியாவுக்கு எதிராக இலங்கை மீனவர்களை துாண்டும் சீனா
ADDED : செப் 03, 2024 01:52 AM

இந்திய மீனவர்களுக்கு எதிராக, இலங்கை மீனவர்களின் உணர்வுகளை துாண்டி விட்டு, சீனா தன் ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்த முயற்சிப்பதாக, புவிசார் அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இது தொடரும்பட்சத்தில், இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இது தொடர்பாக, அவர்கள் கூறியதாவது:
இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள், இந்தியப் பெருங்கடலைக் கடந்து, மற்ற நாட்டுக் கடல் பகுதிகளுக்குள் ஊடுருவி மீன்பிடிக்கும் பழக்கம், பழங்காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது.
கடந்த, 1974ல் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதில் இருந்தே, இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்னை தலைதுாக்கி, இரு நாட்டு அரசுகளுக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது.
இந்திய எல்லை கடந்து, இலங்கை கடல் எல்லைப் பகுதியில், இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதுதான், அவர்கள் தாக்கப்படுவதற்கான காரணம்.
அதைத் தவிர்க்கவே, மீன் வளம் அதிகம் இருக்கும் கச்சத்தீவு பகுதியை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்று, இந்திய மீனவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
குற்றச்சாட்டு
ஆனால், இலங்கை அரசும், அந்நாட்டு மீனவர்களும் அதை கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக் கடல் பகுதிக்குள் ஊடுருவி, தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதால், தங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக, இலங்கை மீனவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
இந்திய மீனவர்கள் இயந்திர மற்றும் இழுவை படகுகளைப் பயன்படுத்தி, தங்களுடைய மொத்த மீன் வளத்தையும் அள்ளிச் செல்வதாக, இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தங்கள் கடல் வளமே முழுமையாக அழிவதாக கூச்சலிடுகின்றனர்.
இதற்காக இலங்கை மீனவர்கள், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, நெடுந்தீவு, மன்னார் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களின் மீன் பிடித்தலை எதிர்த்து, ஒன்றாக கைகோர்த்துள்ளனர்.
இந்திய மீனவர்களை, இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று, இலங்கை உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் இந்திய துாதரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கின்றனர்.
இலங்கை அரசு அலுவலகங்கள் மற்றும் துாதரக அதிகாரி அலுவலகம் முன், மறியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்தே, இலங்கை அரசு தன் கடல் படையை முழு வேகத்தில் ஏவி விட்டு, கடலில் தீவிர ரோந்துப் பணிக்கு அனுப்புகிறது.
இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் புகுந்து மீன் பிடிப்பில் ஈடுபடும்போது, அவர்களை கைது செய்கிறது. சில நேரங்களில் இந்திய மீனவர்கள் மீது கடும் தாக்குதலும் நடத்துகிறது.
ஆராய்ச்சி
இந்நிலையில், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதில் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து, தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் ஆய்வுக்கு, இலங்கை கடல்சார் தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டார்.
அந்த ஆராய்ச்சி முகமை ஆய்வின் அடிப்படையில், இலங்கை அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையின்படி, 'நாளொன்றுக்கு 500 இயந்திர படகுகள் மற்றும் இழுவை படகுகள் இலங்கை கடற்பகுதியில் ஊடுருவி, 350 மில்லியன் டாலர் மதிப்பிலான மீன்கள் மற்றும் பிற கடல் செல்வங்களை எடுத்துச் செல்கின்றன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இழுவைப் படகுகள் மற்றும் வலைகளை, இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதால், கடல் வளத்தை கணிசமாகக் குறைக்கிறது என்றும், அந்த அறிக்கை கூறுகிறது.
சமீபத்தில், இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, இந்திய அரசு, இலங்கைக்கு பெருமளவில் நிதி வழங்கி, நெருக்கடியை சமாளிக்க உதவியது.
ஆனாலும், இலங்கை மீனவர்கள், 'எங்கள் கடல் வளம் பாதிக்கப்படுவதால், எங்களின் சொந்த வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது' என்றே கூக்குரல் எழுப்புகின்றனர்.
இந்திய உதவியால், தங்கள் பொருளாதாரம் எந்தவிதத்திலும் மேம்படவில்லை என வெளிப்படையாகவே, இலங்கை மீனவர்கள் கருத்து சொல்கின்றனர்.
இப்படி இலங்கை - இந்திய மீனவர்களுக்குள், மீன் பிடிப்பதில் இருக்கும் பிரச்னையை உணர்ந்து கொண்ட சீனா, இலங்கையின் கடல் வளத்தை இந்தியா கொள்ளையடிப்பதாக, இலங்கை மீனவர்கள் மத்தியில், குறிப்பாக, தமிழ் மீனவர்கள் மத்தியில் வஞ்சகமான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.
கூடவே, உங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறோம் என்று கூறி, இலங்கை மீனவர்களுக்கு மீன் பிடி வலைகள் மற்றும் பிற பொருட்களை இலவசமாக வழங்குகிறது.
அதுமட்டுமின்றி, இலங்கை மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன் பிடி தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொடுக்க உறுதி அளித்துள்ளது.
இது தவிர, மீனவ குழந்தைகள் கல்வியறிவை மேம்படுத்த, யாழ்ப்பாணம் நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்குவதில் துவங்கி, பல வழிகளிலும் சீன அதிகாரிகள் உதவி வருகின்றனர். இதை, இலங்கை மீனவர்கள் பெருமையாக கருதுகின்றனர்.
கச்சத்தீவை மீட்பது
காங்கேசன்கோட்டையை, 69 மில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தும் திட்டம், இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்கு மட்டுமே உதவும்.
அதனால், இலங்கைக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று, இலங்கை மீனவர்கள் விமர்சிக்கின்றனர்.
இலங்கை மீனவர்களை, இந்திய மீனவர்களுக்கு எதிராக அவர்களை துாண்டி விடும் பணியில், சீனா வெற்றி கண்டிருப்பதை, சமீப கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதில் இருந்தே, இதை உணர்ந்து கொள்ளலாம்.
இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடராமல் இருக்க, சீனாவின் சூழ்ச்சிகளை தடுக்க வேண்டும்.
இதற்கு ஒரேவழி கச்சத்தீவை மீட்பது தான். அதற்கு முன்பாக, இலங்கை மீனவர்களை அழைத்துப் பேசி இரு தரப்புக்கும் இருக்கும் பகைமையை போக்க வேண்டும்.
சமீபத்தில் இலங்கைக்கு அரசு முறை பயணமாகச் சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்த பிரச்னைகள் குறித்து அங்கிருக்கும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் என பலரிடம் பேசியுள்ளார்.
ஆனால், சாதகமான சூழல் தெரியாததால், இந்த விஷயத்தில் அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் இந்திய அரசு உள்ளது.
இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்று, அதிக பாதிப்புகளுக்கு உள்ளாவது தமிழக மீனவர்கள் என்பதால், இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினை, அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் சந்தித்துப் பேசி ஆலோசிக்கக்கூடும் என தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.