கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா; முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைக்கு பின்னணி என்ன
கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா; முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைக்கு பின்னணி என்ன
ADDED : ஜூலை 04, 2024 04:00 AM

தி.மு.க., தலைமை அறிவுறுத்தலை ஏற்று, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய கோவை மேயர் கல்பனா, திருநெல்வேலி மேயர் சரவணன் இருவரும், தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
கோவை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் உள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர்கள் மீது, கட்சித் தலைமைக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றன. ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயர்களுக்கு எதிராக இருந்ததால், கட்சி தலைமை, அமைச்சர் நேருவை அனுப்பி அவ்வப்போது சமாதானம் செய்தது. ஆனாலும், தொடர்ச்சியாக புகார்கள் குவிந்ததால், மேயர்களை மாற்ற தற்போது முடிவு செய்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய மேயர்களை அழைத்து, முதல்வர் ஸ்டாலினே நேரடியாக பேசினார்; பதவியை ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தினார். ஆனாலும், சம்பந்தப்பட்ட மேயர்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இதனால், சம்பந்தப்பட்ட மேயர்களுக்கு, உள்ளூர் நிர்வாகிகள் வாயிலாக தி.மு.க., தலைமை நெருக்கடி கொடுத்தது. இதையடுத்து, கோவை மேயர் கல்பனாவும், திருநெல்வேலி மேயர் சரவணனும் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். உடல் நலம் மற்றும் குடும்பச் சூழலை, அதற்கு காரணங்களாக கூறியுள்ளனர். இருவரின் ராஜினமாவை, மாநகராட்சி கமிஷனர்களும் உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கோவை மாநகராட்சிக்கு முதல் பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டவர் கல்பனா. அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. கோவை பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, அவருடைய செல்வாக்கில் மேயரானார் கல்பனா. மாமன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கல்பனா தடுமாறினார்.
அதோடு மாநகராட்சி டெண்டர்களுக்கு, 3 சதவீதம் கமிஷன் கேட்பதாக புகார் எழுந்தது. அமைச்சர்கள் நேரு, முத்துசாமி பஞ்சாயத்து செய்து பிரச்னையை முடித்தனர். பின், பொது நிதியில் கோரப்படும் டெண்டர்களில், வேறு நபர்கள் தலையிடக் கூடாது; மண்டல அளவில் வார்டுகளுக்கு ஒதுக்கும் நிதி கோப்புகளையும், மன்றத்துக்கு கொண்டு வர வேண்டும்; தன் கையெழுத்து இல்லாமல், 'ஒர்க் ஆர்டர்' வழங்கக் கூடாது என, அவர் காட்டிய கெடுபிடிகள் பெரும் பிரச்னையாக வெடித்தன.
இதே போன்ற பிரச்னைகள் தான் திருநெல்வேலி மேயர் சரவணன் மீதும் எழுப்பப்பட்டன. தொடர்ந்து தலைமைக்கு மேயர் சரவணன் மீது குற்றச்சாட்டுகள் அனுப்பிக் கொண்டிருந்த தி.மு.க., கவுன்சிலர்கள், ஒரு கட்டத்தில், மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு தலையிட்டு, பிரச்னையை முடித்து வைத்தனர்.
ஆனாலும், டெண்டர் விவகாரங்களில் யார் சொல்லியும் கேட்காமல், மேயர் தன்னிச்சையாக முடிவெடுத்து கமிஷன் பெறுவதோடு, மொத்த கமிஷனையும் அவரே எடுத்துச் சென்று விடுகிறார் என்று, லோக்கல் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிப்படையாக பேட்டி அளித்ததோடு, தலைமைக்கும் புகார் அளித்தனர்.
இந்த பிரச்னைகளால், திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சரிவர செயல்படாமல், அடிப்படை பணிகள் கூட சரியாக நடக்கவில்லை என்று ஆட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்த முதல்வர், சரவணனையும் ராஜினாமா செய்ய வைத்துள்ளார்.
இவ்வாறு கூறினர்.
- நமது நிருபர் -