ADDED : ஜூலை 01, 2024 03:11 AM

பொள்ளாச்சி அருகே, 'போதையில் இருந்த இருவரின் உடல் நிலை மோசமடைந்ததற்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல' என, திருப்பூர் போலீசார் தடாலடியாக மறுத்த நிலையில், திருப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த ராமன் சப்ளை செய்த சாராயம் குடித்தே இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக, தற்போது எப்.ஐ.ஆர்., பதிவு செய்திருக்கின்றனர் கோவை மாவட்ட போலீசார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மஞ்சநாயக்கனுாரைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மகேந்திரன், 40; அதே பகுதியில் டீக்கடை நடத்தும் பா.ஜ., ஒன்றிய செயலர் ரவிச்சந்திரன், 55, ஆகியோர் கடந்த, 28ம் தேதி வாந்தி, பேதி ஏற்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, ரவிச்சந்திரன் மனைவி தமிழரசி, 50, புகாரின்படி, நச்சுத்தன்மை கலந்த மது குடித்ததாக ஒரு வழக்கை ஆழியாறு போலீசார் பதிவு செய்தனர்.
அதே வேளையில், ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார், மஞ்சநாயக்கனுாரில் விசாரணை நடத்தியதில் வேறு விதமான தகவல் வெளியானது.
அதில், 'பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன், செந்தில்குமார், மகேந்திரன், செந்தில், முத்துகுமார், லட்சுமணன் ஆகியோர் ஒன்று கூடி மது அருந்துவது வழக்கம்.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட மாவடப்பு பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்த ராமன் என்பவர், மலைத்தேன் விற்பனை செய்வதற்காக மஞ்சநாயக்கனுார் வந்து செல்வார்.
'அவர் சாராயம் காய்ச்சி குடிப்பது தெரிய வந்த நிலையில், அவரிடம் சாராயம் வாங்கியுள்ளனர். அதன் பின், மகேந்திரனின் உறவினர் துக்க நிகழ்ச்சியின் போது பிரபாகரன் என்பவரது தோட்டத்தில் சாராயம் குடித்துள்ளனர்.
'கடந்த 28ம் தேதி மீண்டும் ரவிச்சந்திரனும், மகேந்திரனும் டாஸ்மாக் மதுவில் டீக்கடை அருகே உள்ள பாழடைந்த கட்டடத்தில் இருந்த தண்ணீரை கலந்து குடித்துள்ளனர்' என, தெரியவந்தது.
மாவடப்புக்கு 'சீல்'
கள்ளக்குறிச்சி களேபரமே இன்னும் ஓயாத நிலையில், இன்னொன்றா என, போலீஸ் உயர் அதிகாரிகள் திடுக்கிட்டனர்.
சம்பவ இடம் இரு மாவட்ட எல்லைப்பகுதி என்பதால் கோவை, திருப்பூர் போலீசார் பதறியடித்து, 28ம் தேதி இரவோடு இரவாக தளி போலீஸ் ஸ்டேஷனில் குவிக்கப்பட்டனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார், பொள்ளாச்சி, காடம்பறை வனப்பகுதி வழியாக மாவடப்பு ஆதிவாசி கிராமத்துக்கு விரைந்து வீடு, வீடாக சோதனை நடத்தினர். அருகிலுள்ள குருமலை, குழிப்பட்டி, காட்டுப்பட்டி பகுதிகளும் தப்பவில்லை.
இவ்விவகாரம் வெளியில் கசிந்து விடக்கூடாதென உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்ததால், மாவடப்பு மலைக்கிராமத்துக்கே, 'சீல்' வைத்தது போன்று அனைத்து சாலை மார்க்கங்களும் போலீஸ், வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. செய்தியாளர்கள் மற்றும் 'டிவி' மீடியா வாகனங்களை தடுத்து திருப்பி அனுப்பப்பட்டன.
'ஸ்பாட்'டில் தினமலர்
ஆனால், 'தினமலர்' நாளிதழ் செய்தியாளர்கள் குழுவினர், செங்குத்தான மலைப்பாதையில், நல்லாறு பகுதியில் சூரிகுழி வழித்தடம் வழியாக, ஐந்து மணி நேரம் கரடு முரடான மலையில் நடந்து சென்று மாவடப்பு கிராமத்தை அடைந்து, மக்களை சந்தித்து உண்மை நிலவரங்களை சேகரித்தனர்.
பழங்குடியினர் கூறுகையில், 'போலீஸ் மற்றும் வனத்துறையினர் வந்தனர். இங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது; அனைத்து வீடுகளையும் சோதனையிட வேண்டும்' என்றனர். 'ராமன்' என்ற பெயருள்ளவர்கள் வாருங்கள் என, அழைத்தனர்.
'ஊர் பொதுச்சாவடியில் வைத்து பேச்சு நடத்திய பின், அவர்கள் சோதனையை நடத்தினர்' என்றனர்.
அங்கிருந்த, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க துணைத்தலைவர் செல்வன் கூறுகையில், ''மாவடப்பு கிராமத்தில் கள்ளச்சாராயம் புழக்கம் உள்ளது என, வனத்துறை, போலீசார் விசாரணை நடத்தினர்.
''வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். பழங்குடியினர் அனைவரையும் ஓரிடத்தில் அழைத்து, கள்ளச்சாராயம் எவ்வளவு கொடுமையானது என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,'' என்றார்.
மறுத்த போலீசின் 'உண்மை முகம்'
மாவடப்பு பழங்குடியின கிராமத் திலிருந்து சப்ளையான சாராயம் குடித்து இருவர் அட்மிட் ஆகியிருப்பதாக மக்கள் தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலான செய்தி, 'தினமலர்' பேஸ்புக்கில் வெளியானது.
பதறியடித்து அடுத்த சில நிமிடத்தில், 'மறுப்பு செய்தி' வெளியிட்டது திருப்பூர் மாவட்ட போலீஸ். ஆனால், அதற்கு முன்பே, சம்பவத்தின் சீரியஸ் தன்மையறிந்திருந்த அதே போலீசார், மாவடப்பு மலைக்கிராமத்தில் வீடு, வீடாக சோதனை நடத்தி, ராமன் என்பவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஒரே சம்பவம் தொடர்பாக, கோவை மாவட்ட போலீசார், இரு விதமான எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். சிகிச்சையிலுள்ள ரவிச்சந்திரனின் மனைவி புகாரின்படி, 'நச்சு கலந்த மது' என, ஒரு எப்.ஐ.ஆர்., மற்றும் 'ராமன் என்பவர் சாராயம் சப்ளை செய்ததாக மற்றொரு எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -