வங்கி கணக்கை பயன்படுத்த 'கமிஷன்'; வலை விரிக்கும் சைபர் குற்றவாளிகள்
வங்கி கணக்கை பயன்படுத்த 'கமிஷன்'; வலை விரிக்கும் சைபர் குற்றவாளிகள்
ADDED : நவ 20, 2024 04:12 AM

சென்னை: பண மோசடிக்கு மற்றவர்களின் வங்கி கணக்கை பயன்படுத்த, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 1,000 ரூபாய் கமிஷன் தருவதாகக் கூறி, 'சைபர்' குற்றவாளிகள் வலை விரிக்கின்றனர். இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பரில், சென்னையை சேர்ந்த தொழில் அதிபரிடம், 'நீங்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்' எனக்கூறி, சைபர் குற்றவாளிகள், 1.15 கோடி ரூபாய் பறித்தனர். இதுதொடர்பாக, கோவையை சேர்ந்த விஸ்வநாதன், 54; ஜெயராமன், 57, சுனில்குமார், 26 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, சர்வதேச பங்கு சந்தையில், 'ஆன்லைன்' வாயிலாக வர்த்தகம் செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று, மதுரையை சேர்ந்த நபரிடம், 97 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இதில், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த, முகமது சபீர், 26; முகமது அசாருதீன், 25 உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்படி அடுத்தடுத்து கைது செய்யப்படும் நபர்களிடம், சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது, இத்தகைய சைபர் குற்றவாளிகள், கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிப்போரின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி, கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:
மோசடி நடந்த பின், www.cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் பதிவாகும் போதே, வங்கி கணக்கும் முடக்கப்படும்.
அதனால், சைபர் குற்றவாளிகளுக்கு ஏராளமான வங்கி கணக்குகள் தேவைப்படுகின்றன. எனவே, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வாயிலாக, கிராமம் மற்றும் சிறு நகரங்களில் வசிப்போரை மூளைச்சலவை செய்து, அவர்களின் வங்கி கணக்கை பயன்படுத்த வலை விரிக்கின்றனர்.
'என் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை. அதில் பணம் செலுத்தினால், உடனடியாக பிடித்தம் செய்து விடுவர். அவசரமாக வெளியூரில் உள்ள உறவினரிடம், பணம் கேட்டுள்ளேன்.
அவர் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைப்பார். அதை எடுத்து தாருங்கள். அதற்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 1,000 ரூபாய் கமிஷன் தருகிறேன்' என்று கூறி, மோசடி செய்துள்ளனர்.
இத்தகைய சைபர் குற்றவாளிகள் விரிக்கும் வலையில் யாரும் விழ வேண்டாம். அவ்வாறு வங்கி கணக்கை பயன்படுத்த அனுமதித்தால், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக, உங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.