அரைகுறையாக தகவல் தந்த அதிகாரிக்கு தினசரி அபராதம் : தகவல் ஆணையம் எச்சரிக்கை
அரைகுறையாக தகவல் தந்த அதிகாரிக்கு தினசரி அபராதம் : தகவல் ஆணையம் எச்சரிக்கை
ADDED : செப் 02, 2024 01:43 AM

சென்னை: 'தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களுக்கு, அரைகுறை விபரங்களுடன் பதில் அளித்து ஏமாற்றும் பொது தகவல் அலுவலருக்கு, தினசரி கணக்கில் ஏன் அபராதம் விதிக்கக் கூடாது' என, மாநில தகவல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திட்டை ஊராட்சியில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில், பிரதமரின் வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் பட்டியல் அடங்கிய, 'எம் புக்' ஆவணத்தை, தகவல் அறியும் உரிமை சட்டப்படி, எழில்நாதன் என்பவர் கேட்டுள்ளார்.
கடந்த, 2022ல் இவர் அனுப்பிய மனுவுக்கு, சீர்காழி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், பொது தகவல் அலுவலருமான மு.ஜனகர் உரிய பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து மனுதாரர் அடுத்தடுத்த நிலையில் மேல்முறையீடு செய்தார்.
இது தொடர்பான இரண்டாவது மேல்முறையீட்டை விசாரித்த மாநில தகவல் ஆணையம், 2023 அக்., 30ல் உத்தரவிட்டது. அதில், மனுதாரருக்கு ஏழு நாட்களுக்குள் தகவல் அளித்து, அதை அவர் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
இந்த உத்தரவை, சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் செயல்படுத்தாத நிலையில், இந்த வழக்கு மீண்டும் கடந்த ஜூனில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தகவல் ஆணையர் மா.செல்வராஜ் பிறப்பித்த உத்தரவு:
திட்டை ஊராட்சியில், பிரதமரின் வீட்டுவசதி திட்ட பயனாளிகள் விபரம் கேட்டதில், ஏழு பேர் பெயர்கள் அடங்கிய விபரங்கள் மட்டுமே மனுதாரருக்கு அளிக்கப்பட்டுள்ளன. மீதி விபரங்கள் அளிக்காமல் மறைக்கப்பட்டுள்ளன.
ஆணைய உத்தரவை செயல்படுத்தாத பொது தகவல் அலுவலருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை அவர் உடனடியாக செலுத்த வேண்டும்.
ஆணைய உத்தரவை அலட்சியம் செய்து, அரைகுறையாக பதில் அளித்ததால், அவருக்கு தினசரி, 250 ரூபாய் வீதம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாது என்பதற்கு, பொது தகவல் அலுவலர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.