உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து சரிவு; நுகர்வோர் ஏமாற்றம்
உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து சரிவு; நுகர்வோர் ஏமாற்றம்
ADDED : செப் 04, 2024 04:41 AM

சென்னை: உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து 1,000 டன்னாக குறைந்துள்ளதால், நுகர்வோர்கள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.
விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய, 1999ல் உழவர் சந்தை திட்டம் துவக்கப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுதும் தற்போது, 192 உழவர் சந்தைகள் உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக உழவர் சந்தைகள் பராமரிப்பு கிடப்பில் போடப்பட்டன.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், உழவர் சந்தைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 30க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி, 50க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகளில், மின்னணு விலை பட்டியல் பலகை, 25 உழவர் சந்தைகளில் கழிவுகளை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், 100 இடங்களில் உழவர் சந்தைகளை துவங்க திட்டமிடப்பட்டு, 14 இடங்களில் மட்டும் புதிதாக துவங்கப்பட்டு உள்ளது.
உழவர் சந்தைக்கு நாள்தோறும் 2,300 டன் அளவுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் வரத்து இருந்தது.
இதன் வாயிலாக, 8.50 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்தது; 8,000 விவசாயிகள் பயன் பெற்று வந்தனர். சில மாதங்களாக உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,000 டன்கள் அளவிற்கு மட்டுமே வரத்து உள்ளது.
இதனால், உழவர் சந்தைகளுக்கு பொருட்களை வாங்க வரும் நுகர்வோர்கள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.
இதேநிலை தொடர்ந்தால், பல உழவர் சந்தைகளை மூடும் நிலை ஏற்படும். இந்தப் பிரச்னையை, உழவர் சந்தைகளை பராமரித்து வரும் வேளாண் வணிகப் பிரிவினர் கண்டும், காணாமலும் உள்ளனர்.
காய்கறிகள் சாகுபடியை அதிகரிக்க, தோட்டக்கலை துறை முயற்சி எடுக்கவில்லை எனக்கூறி நழுவி வருகின்றனர். தோட்டக்கலை துறையுடன், வேளாண் வணிகப் பிரிவினர் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் ஊட்ட முடியும்.
இப்பிரச்னையில், வேளாண் துறை செயலர் அபூர்வா தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.