UPDATED : ஜூன் 30, 2024 08:39 AM
ADDED : ஜூன் 30, 2024 05:00 AM

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில், தமிழகத்திலிருந்து அனைத்து ஆதீன தலைவர்களையும் அழைத்து, செங்கோலை லோக்சபாவில் நிறுவினார், பிரதமர் மோடி; வழக்கம் போல இதை எதிர்க்கட்சியினர் எதிர்த்தனர்.
தற்போது துவங்கிய பார்லிமென்ட் புதிய கூட்டத்தொடரிலும், செங்கோல் விவகாரம் தொடர்கிறது. 'செங்கோலை எடுத்து விட்டு, அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்' என, சமாஜ்வாதி கட்சியின் எம்.பி., - ஆர்.கே.சவுத்ரி, சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்; ஆனால், இதை ஏற்க மறுத்து விட்டார், சபாநாயகர் ஓம் பிர்லா. 'இந்தக் கடிதத்தை எழுத துாண்டியது தி.மு.க., - எம்.பி., ஒருவர் தான்' என, பார்லிமென்ட் மத்திய வளாகத்தில் பேச்சு அடிபடுகிறது. 'செங்கோலை எதிர்த்தவர்களுக்கு ஆப்பு வைக்க பிரதமர் தயாராகி விட்டார்' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, அடுத்த வாரம் பிரதமர் மோடி பார்லிமென்டில் பேச இருக்கிறார்; அப்போது செங்கோலை எதிர்த்தவர்களை ஒரு பிடி பிடிக்க இருக்கிறாராம். 'செங்கோலுக்கு எதிராக யார் இருந்தாலும், அவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள். தமிழக கலாசாரத்திற்கு மதிப்பளித்து, பார்லிமென்டில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. 'ஏன் இதை வடமாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்க்கின்றனர்? தமிழக கலாசாரத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா?' என, பல கேள்விகள் கேட்க உள்ளாராம் மோடி.