ADDED : ஏப் 07, 2024 12:37 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தின், அமேதி மற்றும் ரேபரேலி லோக்சபா தொகுதிகள், சோனியாவின் குடும்ப தொகுதிகளாக பார்க்கப்படுகின்றன. காலம் காலமாக இந்த தொகுதிகள் காங்கிரசின் வெற்றி தொகுதிகளாகவே இருந்து வந்தன. அமேதியில் ராகுலும், ரேபரேலியில் சோனியாவும் போட்டியிட்டு வந்தனர்.
கடந்த 2004லிருந்து தொடர்ந்து மூன்று முறை அமேதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார் ராகுல். ஆனால், கடந்த தேர்தலில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம், 55,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். எனினும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றார்.
தற்போது வயநாடில் மனு தாக்கல் செய்துவிட்டார் ராகுல். இங்கு, 98 சதவீதம் சிறுபான்மையினர் ஓட்டுகள் இருப்பதால், சுலபமாக வெற்றி பெறுவார் என்கின்றனர். ஆனால், அமேதியிலும் போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையே சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா அமேதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் போட்டியிடுவாரா அல்லது ராகுலே அமேதியிலும் களம் இறங்குவாரா என்பது குழப்பமாக உள்ளது.
கடந்த 2019 தேர்தலில், உத்தர பிரதேசத்தின் 80 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது. ரேபரேலி தொகுதியிலிருந்து சோனியா வெற்றி பெற்றார். சோனியா இம்முறை போட்டியிடாமல் ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்டார். இங்கு பிரியங்கா போட்டியிடுவார் என செய்திகள் அடிபடுகின்றன.

