UPDATED : பிப் 23, 2025 08:07 AM
ADDED : பிப் 23, 2025 12:12 AM

புதுடில்லி: 'நம் நாட்டில் நடக்கும் தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, அமெரிக்க நிறுவனம், 182 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது' என, வெடிகுண்டு ஒன்றை துாக்கிப் போட்டார், அமெரிக்க அதிபர் டிரம்ப். இது குறித்து விசாரணை நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தேர்தல் கமிஷனுக்கும், இந்த நிதிக்கும் என்ன சம்பந்தம்? இது தொடர்பாக பல விஷயங்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. தலைமை தேர்தல் கமிஷனராக, 2010 ஜூலை முதல் 2012 ஜூன் வரை பதவி வகித்தவர், சகாபுதீன் யாகூப் குரேஷி. இவருடைய பணிக்காலத்தின் போது, உலக அளவில் தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி அளிக்க, டில்லியின் துவாரகா பகுதியில் ஒரு புதிய அமைப்பு துவங்கப்பட்டது.
அதே நேரத்தில், ஒடிசாவைச் சேர்ந்த, 'இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ்'அதிகாரி ஒருவரை தேர்தல் கமிஷனில் இயக்குனராக நியமித்தார் சகாபுதீன் யாகூப் குரேஷி; இதற்கு அதிகாரிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு. ஆனால், சகாபுதீன் யாகூப் குரேஷி எதையும் பொருட்படுத்தாமல் அந்த அதிகாரியை நியமித்தார்.
மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு, கூட்டம் என, தலைமை தேர்தல் அதிகாரி செய்யும் வேலையை, இந்த ஒடிசா அதிகாரி செய்யத் துவங்கினார்; இதற்கு பல மாநில தேர்தல் கமிஷனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்னொரு பக்கம், உலக அளவில் தேர்தல் பயிற்சிக்காக துவங்கப்பட்ட அமைப்பு வாயிலாக, ஏரளமான வெளிநாடுகளுக்கு சென்று வந்தார் அந்த அதிகாரி. தேர்தல் கமிஷனின் எந்த அதிகாரியும், இவர் அளவிற்கு உலக நாடுகளுக்கு பயணம் செய்தது இல்லை.
ஒருமுறை, வெளிநாட்டில் நடந்த கூட்டத்திற்கு, அந்த கூட்டம் முடிந்த பின் தான் சென்றாராம். மற்றொரு முறை, ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு விசா இல்லாமல் சென்று மாட்டிக்கொள்ள, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக உதவியால் தப்பினாராம். இவரது வெளிநாட்டு பயணத்திற்கெல்லாம், 'அமெரிக்க நிதிதான் காரணம்' என, சொல்லப்படுகிறது.
'இந்த பயிற்சி அமைப்பு என் பணிக்காலத்தில் தான் துவங்கப்பட்டது; ஆனால், அமெரிக்காவிலிருந்து நிதி எதுவும் வாங்கவில்லை' என, மறுத்துள்ளார் சகாபுதீன் யாகூப் குரேஷி. இதை யாரும் குறிப்பாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளே நம்ப தயாராக இல்லை. மத்திய அரசின் விசாரணையில், முக்கியமான விஷயங்கள் வெளியாகும் என, பலரும் நம்புகின்றனர்.