ADDED : மார் 09, 2025 02:16 AM

புதுடில்லி: காங்கிரசில் ஏற்கனவே பல பிரச்னைகள் உள்ளன. இதில், புதிதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார், மணிசங்கர் அய்யர்; 83 வயதாகும் இவர், நான்கு முறை எம்.பி.,யாக இருந்தவர். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவிற்கு மிகவும் நெருக்கம்.
அப்படிப்பட்டவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியது, காங்கிரசை குறிப்பாக, சோனியா குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
'லண்டனில் படிக்கச் சென்ற ராஜிவ், இரண்டு முறை பெயில் ஆனவர்' என, சொல்லிவிட்டார் மணிசங்கர். இதை, பா.ஜ., பிடித்துக்கொண்டுவிட்டது. உடனே, சீனியர் காங்கிரசார், மணிசங்கரை கடுமையாக விமர்சிக்கத் துவங்கி விட்டனர். ராஜிவ் அமைச்சரவையில் இருந்தவர், 'பஞ்சாயத்து ராஜ்' சட்டம் வர முயற்சி செய்தவர் என, பல வகைகளில் கட்சிக்கு உதவியவர், மணிசங்கர். ஆனால், ராஜிவ் மறைவிற்குப் பின், ஓரங்கட்டப்பட்டார். அப்பாவிற்கு யார் யார் நெருக்கமாக இருந்தனரோ, அவர்களை கட்சியின் முக்கிய பதவிகளிலிருந்து துாக்கிவிட்டார் ராகுல். அத்துடன், அந்த சீனியர்களிடம் பேசுவதும் கிடையாது; அதேபோல சோனியாவும், மணியை ஒதுக்கிவிட்டார்.
மணியை, 'அங்கிள்' என, அழைப்பவர் பிரியங்கா. அவரும் இப்போது பேசுவதில்லையாம். வெறுத்துப்போன மணி, இப்போது பல ஆண்டுகள் கழித்து, ராஜிவ் குறித்த உண்மையை பேசி வருகிறார்.
'ஒரு வகையில், காங்கிரசின் தொடர் தோல்விக்கு, மணிசங்கரும் ஒரு காரணம்' என்கின்றனர் காங்கிரசார். 'மணி ஒரு உளறுவாயர்... இவருடைய கமென்ட்களால் தான் மோடி வளர்ந்துவிட்டார்' என, இவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த 2014 பார்லிமென்ட் தேர்தல் பிரசாரத்தின்போது, 'மோடி டீ விற்பவர்' என, கிண்டல் செய்தார்.
அதை, மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்து வெற்றி பெற்றார் மோடி. பின்னர் 2017ல், குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது, 'மோடி கீழ்த்தரமானவர்' என, விமர்சித்தார். 'குஜராத்திகளை கேவலப்படுத்திவிட்டது காங்கிரஸ்' என, மோடி பிரசாரம் செய்ய, அங்கு மீண்டும் பா.ஜ., வெற்றி பெற்றது.
'இப்போதும் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்காமல், உளறிக் கொண்டிருக்கிறார்' என கோபப்படுகின்றனர், காங்கிரசார்.