ADDED : செப் 01, 2024 12:38 AM

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு ஈடு கொடுப்பது யார்? ராகுலா அல்லது வேறு ஒருவரா? 2029 லோக்சபா தேர்தலில், மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளராக, 'இண்டி' கூட்டணியில் யார் நிறுத்தப்படுவர்? டில்லி அரசியல் அரங்கில் இது குறித்து ஒரு தலைவரின் பெயர் கிசுகிசுக்கப்படுகிறது. அவர், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.
ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என, நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டாலும் ராகுலுக்கு விருப்பமில்லை. தனக்கு எந்தவித பொறுப்பும் இல்லாமல், தன்னிச்சையாக இருக்க வேண்டும் என்பது ராகுலின் ஆசை.
அதனால் தான், 'பார்லிமென்ட் குழுக்களில் முக்கியமான பொது கணக்கு குழுவிற்கு ராகுல் தலைவராக பணியாற்றுவார்' என, காங்கிரசில் சொல்லப்பட்டது; ஆனால், அவர் தலைவராகவில்லை. இவருக்கு பதிலாக, கே.சி.வேணுகோபாலை சிபாரிசு செய்தது காங்கிரஸ்; தற்போது, வேணுகோபால் அந்த கமிட்டியின் தலைவராகி உள்ளார்.
இதனால், 'ராகுல் ஒதுங்கி விட்டார்; இளம் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிக்கி திணறி வரும், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜியும், பிரதமர் பதவிக்கு தயாராக இல்லை. எனவே, அகிலேஷ் யாதவ் தான் சரியான போட்டி' என, சில கூட்டணிக் கட்சிகள் பேச ஆரம்பித்து விட்டன.
'சிறுபான்மையினருக்கு சாதகமாக செயல்பட்டு வருபவர், அகிலேஷ். எனவே, மோடிக்கு எதிரான ஓட்டுகள் அனைத்தையும் இவர் அள்ளி விடுவார்' என்கின்றனராம்.
இதைத் தவிர வேறொரு விவகாரத்திலும் இறங்கியுள்ளாராம் அகிலேஷ். தன் இமேஜை உயர்த்திக் கொள்ளவும், பா.ஜ.,வை கடுமையாக தாக்கவும், ஒரு நிறுவனத்தின் உதவியை நாடி உள்ளாரம். அந்த வெளிநாட்டு நிறுவனமும், விரைவில் களம் இறங்கும் என, சொல்லப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகள் அகிலேஷ் தான் சரியான போட்டி என கூறினாலும், காங்கிரஸ் இதை ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகமே?