கோவையில் இருந்து வயநாடுக்கு விரைந்தது 'டெல்டா' மீட்புப்படை
கோவையில் இருந்து வயநாடுக்கு விரைந்தது 'டெல்டா' மீட்புப்படை
UPDATED : ஆக 01, 2024 05:07 AM
ADDED : ஜூலை 31, 2024 10:34 PM

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக, கோவையிலுள்ள 'டெல்டா ஸ்குவாடு' எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை, கேரளம் புறப்பட்டுச் சென்றது.
நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இயற்கைப் பேரிடர் ஏற்படும் போது, மீட்புப் பணி செய்வதற்காக, கோவையை தலைமையிடமாகக் கொண்டு, 2015ல் டெல்டா ஸ்குவாடு எனப்படும் மீட்புப்படை துவக்கப்பட்டது.
லெப்டினன்ட் ஈசன் தலைமையில் இயங்கும் இந்தப் படையில், இளம் ராணுவ வீரர்கள் 25 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களின்போது, 18 இடங்களுக்குச் சென்று, 3,300 உயிர்களை இந்த படையினர் மீட்டுள்ளனர்.
மலையேற்றம், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகளைப் பெற்றுள்ள இந்த இளம் படையினர், 2018, 2019 ஆகிய ஆண்டுகளில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது, கேரளம் மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் பல நுாறு பேர் காணாமல் போயுள்ளனர். அங்கு சென்று மீட்புப்பணி செய்வதற்கு, கோவை டெல்டா ஸ்குவாடுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடமிருந்து, அழைப்பு வந்துள்ளது.
அதை ஏற்று, இந்த மீட்புப்படையைச் சேர்ந்த 25 பேர், நேற்று காலையில் கேரளம் புறப்பட்டுச் சென்றனர். மீட்புப்பணிக்குத் தேவையான பல்வேறு மீட்பு சாதனங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
-நமது சிறப்பு நிருபர்-