விருதுநகர் விவசாயிகளுக்கு 'டிஜிட்டல்' அடையாள அட்டை
விருதுநகர் விவசாயிகளுக்கு 'டிஜிட்டல்' அடையாள அட்டை
UPDATED : செப் 14, 2024 04:55 AM
ADDED : செப் 14, 2024 01:32 AM

பொதுமக்கள் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டிருக்கும் ஆதார் கார்டை போலவே, நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு தனியாக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு இந்த அட்டை வழங்கப்பட உள்ளது.
விவசாயம் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்ததுதான், 'அக்ரி ஸ்டாக்' என்ற அம்சம்.
இதன் கீழ், 'பப்ளிக் இன்ப்ராஸ்ட்ரக்சர் டிபிஐ' என்ற பெயரில், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து சேவைகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ஒருங்கிணைத்து முறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் முக்கிய நோக்கமே விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதுதான். இதன்படி, விவசாயிகளுக்கு என்றே மிகுந்த நம்பகத்தன்மையுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையாக வடிவமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த 2024 - 25ம் நிதியாண்டில், ஆறு கோடி பேருக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
முதற்கட்டமாக, உ.பி., குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, தமிழகம் என ஆறு மாநிலங்கள் தேர்வாகியுள்ளன. அந்த மாநிலங்களில் ஏதாவது ஒரு மாவட்டம் அடையாளம் காணப்பட்டு அங்குள்ள விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகள் தரப்படும். தமிழகத்தில், விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
விவசாயிகள் சார்ந்த தகவல்கள், அவர்களின் நிலம் சார்ந்த தகவல்கள், நில உரிமை, பயிர்களுக்கான விதைகள், பயிர் காப்பீடு மற்றும் அரசு தரப்பில் இருந்து கிடைக்கும் அனைத்து நிதியுதவிகள் என, அனைத்தையும் தொடர்புபடுத்தி இந்த அட்டைகள் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
- நமது டில்லி நிருபர் -