டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' பிரதமருக்கு அதிரடி பாதுகாப்பு?
டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' பிரதமருக்கு அதிரடி பாதுகாப்பு?
ADDED : ஜூலை 21, 2024 04:29 AM

நடந்து முடிந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு பதிலளித்து பிரதமர் பேசும் போது, ஏராளமான களேபரங்கள் நடந்தன. மோடியின் பேச்சை கேட்க விடாமல் தடுக்க, எதிர்க்கட்சியினர் கூச்சல் போட்டுக் கொண்டேயிருந்தனர்; ஆனாலும், இது குறித்து கவலைப்படாமல், தன் உரையை முடித்தார் மோடி. தன் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களிடம், 'எல்லாரும் பிரதமர் இருக்கைக்கு அருகே போங்கள்' என்று கூறி, அவர்கள் பிரதமர் இருக்கைக்கு செல்வதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ராகுல். 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் சபையின் நடுவே வந்து, பிரதமருக்கு எதிரில் நின்று கோஷங்களை எழுப்பினர்.
இது, பிரதமரின் பாதுகாப்பை கவனிக்கும், எஸ்.பி.ஜி., அமைப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 'தற்போதுள்ள அரசியல் வெறுப்பில், ஒரு வேளை எம்.பி.,க்கள் பிரதமரை தள்ளி விடுவது அல்லது அவரை தாக்கும் நிலை கூட ஏற்படலாம்; எனவே, எதற்கும் தயாராக இருக்க வேண்டும்' என, அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
எஸ்.பி.ஜி., அமைப்பு சீனியர் அதிகாரிகள், சமீபத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனராம்; அப்போது, பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக தீவிர ஆலோசனை நடந்ததாம். 'பார்லிமென்டில் எதுவும் நடக்கலாம்; எனவே, பார்லிமென்டிற்குள், அதாவது சபைக்குள்ளும் பிரதமருக்கு அச்சுறுத்தல் உள்ளது' என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, 'எதிர்க்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையே, ஏதாவது ஒரு தடுப்பு போன்று ஏற்பாடு செய்யலாமா' என, யோசித்து வருகின்றனராம். இதனால், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பிரதமர் அருகே வர முடியாது; மேலும், கண்ணாடி தடுப்பு வைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதை அனைத்து எம்.பி.,க்களும் ஏற்றுக் கொள்வரா என்பது சந்தேகம்!