UPDATED : மே 26, 2024 10:48 AM
ADDED : மே 26, 2024 03:30 AM

டில்லியில் ஏழு லோக்சபா தொகுதிகள் உள்ளன. நாட்டில் எங்கு வெற்றி பெற்றாலும், டில்லி வெற்றிதான் கவுரவமாக கருதப்படுகிறது. காரணம், தலைநகர் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் என அதிகார மையம் இங்குதான் உள்ளது.
இந்த ஏழு தொகுதிகளையும் 2014, 2019ல் பா.ஜ., தான் வென்றது. 2013க்கு முன்பாக பா.ஜ.,வும், காங்கிரசும் மட்டுமே இங்கு மோதிக்கொண்டிருந்தன. ஆனால் 2013ல் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி வந்த பின் காங்கிரஸ் பின்னுக்கு தள்ளப்பட்டு பா.ஜ., - ஆம் ஆத்மி மோதல் துவங்கியது. 2015 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி டில்லியில் ஆட்சியைப் பிடித்தது. 70 சட்ட சபை தொகுதிகளில் 67ல் வென்றது கெஜ்ரிவால் கட்சி. பா.ஜ.,வுக்கு 3 சீட் கிடைத்தது. காங்கிரசுக்கு எதுவுமே கிடைக்கவில்லை.
2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,விற்கு மாபெரும் வெற்றி கிடைத்து. மோடி இரண்டாவது முறையாக பிரதமரானார். இந்த வெற்றி 2020 டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு சாதகமாக இருக்கும் என, அந்த கட்சி தலைமை நம்பியது. ஆனால் ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற, வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ., வென்றது.
டில்லியில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் எதிரும் புதிருமாக இருந்தாலும், இந்த முறை கூட்டணி அமைத்துள்ளன. ஆம் ஆத்மி நான்கு தொகுதிகளிலும் காங்கிரஸ் மூன்றிலும் போட்டியிடுகின்றன.
கெஜ்ரிவால் கைதால், அவருக்கு அனுதாப அலை வீசும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கெஜ்ரிவால் வீட்டில் அவரது கட்சி எம்.பி., ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரம் பெரிய பிரச்னையாகியுள்ளது. இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர் கட்சியினர்.
இன்னொரு பக்கம், ஆம் ஆத்மி கட்சியோடு வேலை செய்ய காங்., தொண்டர்கள் சங்கடப்படுகின்றனர். இந்த கூட்டணி பிடிக்காமல் காங்கிரசின் சீனியர் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.,வில் சேர்ந்துவிட்டார்.
டில்லி யார் பக்கம் என்பது 4ம் தேதி தெரிந்துவிடும்.