ADDED : ஆக 25, 2024 04:51 AM

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ளார் மோடி. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றும்போது, 'எந்த நிலையிலும் பல சீர்திருத்தங்களை கொண்டு வருவேன்' எனக் கூறினார்.
இதனால், 'கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்தாலும், மோடி முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே செயல்படுவார்' என, சொல்லப்பட்டது.
சமீபத்தில், மத்திய அரசின் இணை செயலர் பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அல்லாத நேரடியாக விண்ணப்பங்களை வரவேற்றது, மத்திய அரசின் தேர்வாணையம். இதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல், 'இது பட்டியலினத்தவர்களை பாதிக்கும்' என்றார்.
உடனேயே, பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வானும் எதிர்ப்பு தெரிவித்தார்; இது, பா.ஜ.,விற்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த நாளே, மத்திய தேர்வாணையம், இணை செயலர் பதவிக்கான விளம்பரத்தை, 'வாபஸ்' பெற்றது.
'நெருக்கடியில் சிக்கி விட்டாரா மோடி' என, அரசியல் வட்டாரங்களில் பேச்சு ஆரம்பித்து விட்டது. இந்த சர்ச்சை முடிவதற்குள், இன்னொரு விஷயமும் பிரச்னையை கிளப்பி விட்டது.
ஜம்மு - காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.,வின் பொதுச்செயலராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். 'இவர் ஜம்மு - காஷ்மீர் தேர்தலை கவனித்துக் கொள்வார்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2015ல் ஜம்மு - காஷ்மீரில் பா.ஜ., -- பி.டி.பி., கூட்டணி ஆட்சி அமைக்க, அடித்தளம் அமைத்தவர் ராம் மாதவ். பிற்பாடு பிரதமருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ்.,சில் முக்கிய பதவி வகித்த மாதவ், மீண்டும் பா.ஜ.,வில் வருவது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., ஆசியோடு தான் மாதவ் பா.ஜ.,வுக்கு மீண்டும் வந்துள்ளார். 'ஆர்.எஸ்.எஸ்., உடன் மோடிக்கு கருத்து வேறுபாடு' என, செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில், 'மாதவின் நியமனம், மோடி தன்னிச்சையாக செயல்படுகிறாரா என்பதை கேள்விக்குறியாக்கி விட்டது' என, பா.ஜ.,விற்குள்ளாகவே குரல்கள் ஒலிக்கின்றனவாம்.