ADDED : செப் 01, 2024 01:38 AM

கோல்கட்டா: கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நாடே பற்றிக் கொண்டு எரிகிறது. ஒரு பக்கம், நாடு முழுதும் உள்ள டாக்டர்கள் வேலை நிறுத்தம், இன்னொரு பக்கம் உயர் நீதிமன்றம், மேற்கு வங்க போலீசை கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் உட்பட கூட்டணிக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் மம்தாவிற்கு எதிராக பேசி வருகின்றன.
'கொலை நடந்த இடத்தில் உள்ள தடயங்களையும், தன் ஆட்களை விட்டு மம்தா அழித்து விட்டார்' எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் தன் பங்கிற்கு கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால் மம்தாவோ, 'இதற்கெல்லாம் காரணம் பா.ஜ., தான்' என பேசியதுடன், 'எங்கள் மாநிலத்தில் பற்றி எரியும் நெருப்பு, விரைவில் அசாம் உட்பட பா.ஜ., ஆளும் மாநிலங்களிலும் பற்றி எரியும்' என, சவால் விட்டு உள்ளார்.
டில்லி மீடியாக்கள், 'மம்தா, நெருப்பை போன்று அனல் வீசக்கூடியவர்; அவரை கையாளுவது மிகவும் கடினம்' என கூறி வருகின்றன. 'பா.ஜ.,விற்கு எதிராக அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும்' என, கூட்டணி தலைவர்கள் விரும்புகின்றனர்; ஆனால், மம்தாவை எப்படி கையாளுவது என்பது தான் பிரச்னை.
சமீபத்தில் மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரசின் தலைவருமான சரத் பவார், மம்தாவை தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார்; ஆனால் அவர் பேசவில்லை. ராகுலுடன் சண்டை இருந்தாலும், பவாருடன் நட்பில் தான் உள்ளார் மம்தா. அவருடனேயே பேசாதது, 'எதிர்க்கட்சி கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்குமோ' என, மோடிக்கு எதிர் கோஷ்டியினர் அஞ்சுகின்றனர்.