UPDATED : மே 02, 2024 05:07 AM
ADDED : மே 01, 2024 11:36 PM

திருப்பூர் : வெளிநாட்டு பறவைகள் தாயகம் சென்றுவிட்ட நிலையில், நஞ்சராயன் குளத்துக்கு உள்நாட்டு பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. நேற்று அரிதாக, மஞ்சள் குறுகு, கருங்குறுகு, மயில் உள்ளான் பறவைகளை காண முடிந்தது.
திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையத்தில், பறவைகள் சரணாலயமான நஞ்சராயன் குளம் உள்ளது. தண்ணீர் அதிகம் இருப்பதாலும், மீன்கள் அதிகம் உள்ளதாலும், இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் பறவைகளை காணமுடியும். உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி, வெளிநாட்டு பறவைகளும் குளிர் கால வலசையாக திருப்பூருக்கு வந்து இளைப்பாறிச்செல்கின்றன.

ஆகாயத்தாமரைஅகற்ற வேண்டும்!
இது குறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:
நஞ்சராயன் குளத்துக்கு தற்போது, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து உள்நாட்டு பறவைகள் வந்து கொண்டிருக்கின்றன. புள்ளி மூக்கு வாத்து, செந்நீல கொக்கு, மஞ்சள் குறுகு, மடையான், நீர் காகங்கள், நடுத்தர கொக்கு, சம்பல் கொக்கு, கூழைக்கிடா, சாம்பல் கொக்கு போன்ற உள்நாட்டு பறவைகள் நஞ்சராயன் குளத்தில் உள்ளன.
இன்று (நேற்று) 42 விதமான உள்நாட்டு பறவைகளை பதிவு செய்ய முடிந்தது. 47 கூழைக்கிடா; 200 க்கு மேல் சிறிய நடுத்தர பெரிய நீர் காகங்கள், ஏராளமான கொக்குகள் உள்ளன. மஞ்சள் குறுகு, கருங்குறுகு, மயில் உள்ளான் ஆகிய அரிதான பறவைகளையும் காணமுடிந்தது. இணை கூட இல்லாமல், ஒற்றை பறவையாக மஞ்சள் குறுகு உள்ளது.
வழக்கமாக, 160க்கு மேல் கூழைக்கிடா இருக்கும். கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, புள்ளி மூக்கு வாத்து உள்ளிட்ட சில பறவைகள், இனப்பெருக்கத்துக்காக, திருநெல்வேலி கூந்தன் குளம், வேடந்தாங்கல் உள்ளிட்ட இடங்களுக்கு உள்நாட்டு வலசை சென்றுள்ளன.
நஞ்சராயன் குளத்தில் ஆண்டுமுழுவதும் நீர் இருப்பு உள்ளது. மீன் உள்ளிட்ட பறவைகளுக்கு தேவையான இரையும் உள்ளது. குளக்கரையில் கருவேல மரங்களை நடவு செய்தால், உள்நாட்டு பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வேறு பகுதிகளுக்கு வலசை செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது; நிரந்தரமாக நஞ்சராயன் குளத்திலேயே தங்கியிருக்கும்.
குளத்தின் பெரும்பகுதியை ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. இதனால், மீன் உள்ளிட்ட உயிரினங்களின் வளர்ச்சி தடைபட்டு, பெரிய பறவைகளுக்கு இரை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. எனவே, ஆகாயத்தாமரைகளை அகற்றுவது மிகவும் அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.

