குழந்தைகளுக்கு வறட்டு இருமல் இருந்தால்... அலட்சியம் வேண்டாம்; உடனடி சிகிச்சை அவசியம்
குழந்தைகளுக்கு வறட்டு இருமல் இருந்தால்... அலட்சியம் வேண்டாம்; உடனடி சிகிச்சை அவசியம்
UPDATED : ஜன 21, 2025 05:44 AM
ADDED : ஜன 21, 2025 12:12 AM

சென்னை: மழைக்காலம் முடிந்து குளிர்காலம் துவங்கிய நிலையில், பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சல், சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இரவில் வறட்டு இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, அலட்சியம் காட்டாமல், உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
பருவநிலை மாற்றத்தால், 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் வலி, தொண்டை வலி, வறட்டு இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது, மழைக்காலம் முடிந்து, குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில், நிமோனியா வகை தொற்றால், குழந்தைகள் அதிகளவில் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவாச பிரச்னை
இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறிய மருத்துவ கிளினிக்குகளில், சுவாச பிரச்னையால் தினமும் பல குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
நிமோனியா பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளால், நுரையீரல் திசுக்களில் ஏற்படும் தொற்று, மழைக்காலம் முடிந்து, குளிர்க்காலங்களில் தீவிரமடைந்து உள்ளது.
இதில், பாக்டீரியா ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்ற 'நிமோகோகல்' தொற்று, சைனஸ், மூளைக்காய்ச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேநேரம், 'மைக்கோபிளாஸ்மா நிமோனியா பாதிப்பு காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, குளிர், வியர்வை, வாந்தி, வயிற்றுப்போக்கு, சுவாச பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போது, இவ்வகை நிமோனியா தான், குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதிப்பு
இதன் தாக்கம் முதலில் லேசான பாதிப்பை ஏற்படுத்தும். ஓரிரு நாட்களுக்கு பின் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில், உரிய சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டு, உயிரிழப்பை ஏற்படுத்தி விடும்.
குறிப்பாக, டெங்கு, கொரோனா, டைப்பாய்டு, மலேரியா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, நிமோனியா பாதித்தால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நிமோனியா காய்ச்சலில், இதய பிரச்னை, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, புகைப்பழக்கம் உடையோர், கர்ப்பிணியர், நோய் எதிர்ப்பு குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, 2 வயது குழந்தைகள் முதல் 65 வயது முதியவர்களை பாதிக்கக்கூடும்.
இதற்கு டாக்டர் அறிவுரையின்றி மருந்துகள் எடுக்கக் கூடாது. நன்கு காய்ச்சிய குடிநீர் அருந்தலாம்; நீராவி பிடிக்கலாம். இந்நேரங்களில், புகைப்பிடிப்பதை தவிர்க்காவிட்டால், பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புள்ளது.
சீனாவில், எச்.எம்.பி.வி., எனப்படும் ஹியூமன் மெட்டா நிமோ வைரஸ் பரவல் சமீபத்தில் அதிகரித்தது. நுரையீரலை தாக்கி சுவாச கோளாறு ஏற்படுத்தும் இந்த வகை தொற்று குழந்தைகள் மற்றும் முதியோரை எளிதில் தாக்குகிறது.
குணப்படுத்தலாம்
நிமோனியா காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய பாதிப்பு தான். இதற்கு, அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகள் துாங்கும்போது வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டால், பெற்றோர் அலட்சியப்படுத்தாமல் டாக்டரிடம் உரிய சிகிச்சை பெற வேண்டும். அலட்சியம் காட்டினால், ஆஸ்துமா பாதித்த குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கான தடுப்பு மருந்துகள் உள்ளன.
- தேரணி ராஜன், டீன்,ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை
பதற்றம் வேண்டாம்!
எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்றுக்கு பிரத்யேகமான மருந்துகள், தனி வார்டுகள் இல்லை. இந்த வைரஸ் தொற்று பாதிப்பு மூன்று, நான்கு நாட்களில் தானாக சரியாகிவிடும். இது மிகவும் கட்டுக்குள் இருக்கிறது; பதற்றப்பட தேவையில்லை. பனி, குளிர், அவ்வப்போது மழை பெய்வதால், குடிநீரை சூடாக்கி குடிக்க வேண்டும். அதோடு, சரியான நேரத்தில் சத்தான உணவு சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம்.
- மா.சுப்பிரமணியன், அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை