திட்டாதீங்க... அரவணைக்கும் நேரம் இது! பெற்றோருக்கு அட்வைஸ்
திட்டாதீங்க... அரவணைக்கும் நேரம் இது! பெற்றோருக்கு அட்வைஸ்
UPDATED : மே 08, 2024 02:51 AM
ADDED : மே 07, 2024 10:40 PM

''தேர்வில் மதிப்பெண் குறைந்திருந்தாலும், தேர்ச்சி பெறாமல் இருந்தாலும், தங்கள் குழந்தைகளை அரவணைப்பது பெற்றோரின் கடமை,'' என, கோவையை சேர்ந்த மனநல மருத்துவர் பவித்ரா மோனி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்வு முடிந்த கையோடு, எவ்வளவு மதிப்பெண் வரும் என்று, மாணவ, மாணவியரிடம், பெற்றோர், உறவினர்கள் கேள்வி எழுப்பியிருப்பர். மாணவர்களும் தங்களால் முடிந்தளவு தேர்வு எழுதியிருப்பர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதிப்பெண் குறைந்திருந்தாலும், தேர்ச்சி பெறாமல் இருந்தாலும், தங்கள் குழந்தைகளிடம், பெற்றோர் முதலில் கடைபிடிக்க வேண்டியது பொறுமை தான்.
மாணவர்களும், தங்கள் பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தில் இருப்பர். இந்த சமயத்தில் மாணவர்களை திட்டுவதோ, சக மாணவர்களுடன் ஒப்பீடு செய்வதோ கூடாது. கடினமான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.
தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டது, தேர்ச்சி பெறாமல் போய் விட்டோம் என்று மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தாலும்,அதிலிருந்து விடுபட செய்ய வேண்டும் என்றால், பெற்றோர், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டிருந்தால், மாணவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடும். தொடர்ந்து தன்னம்பிக்கை ஊட்டினால், மாணவர்கள் இன்னும் பலம் பெறுவர். இவ்வாறு, அவர் கூறினார்.
வாழ்வை தீர்மானிக்காது
மூத்த மனநல மருத்துவர் சீனிவாசன் கூறியதாவது: தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை அல்ல. ஒவ்வொரு தோல்விக்கு பின்னும் ஒரு வெற்றி மறைந்துள்ளது. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை. அதைத்தாண்டியும், வாழ்க்கை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் மாணவர்களுடனே இருக்க வேண்டும். தனியாக விடக்கூடாது. மதிப்பெண்கள் குறைந்திருந்தால் அதை குறையாக கூறக்கூடாது.
நீ உன்னுடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாய், அதன் பலன் தான் இது. எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க அறிவுறுத்த வேண்டும். இன்று தோல்வி அடைந்தால், அதில் தேர்ச்சி பெற உடனடி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
வாழ்விலும் இதுபோல் நடக்கும், அதற்கு தயாராக வேண்டும். எதிர்பார்த்த அனைத்தும் நடக்காது. அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

