ரொம்ப நேரம் 'கிச்சனில்' நிற்காதீங்க! பெண்களுக்கு டாக்டர் 'அட்வைஸ்'
ரொம்ப நேரம் 'கிச்சனில்' நிற்காதீங்க! பெண்களுக்கு டாக்டர் 'அட்வைஸ்'
ADDED : ஏப் 28, 2024 01:34 AM

மதுரை: கத்தரி வெயில் மே 4ல் துவங்கி 28ல் முடிவடைய உள்ளது. ஆனால் மதுரையில் கத்தரி வெயிலுக்கு போட்டியாக ஏப்ரல் முதல் நாளில் இருந்தே வெப்ப அலை உருவாகி வருகிறது. வீட்டில் இருக்கும் வயதானவர்கள் பரிதவிக்கின்றனர்.
காலையில் அடுப்படியில் பெண்கள் சமையல் செய்யும்போது இடையிடையே வியர்வை குறையும் வகையில் ஓய்வெடுக்க வேண்டும் என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை மனநலப்பிரிவு துறைத்தலைவர் கீதாஞ்சலி.
அவர் கூறியதாவது:
வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைவு, சோடியம் அயனி குறைவு, அதிக வெப்பத்தால் உடல் இயங்க முடியாமல் இதய அடைப்பு, மூளை செயலிழப்பு திறனால் குழப்பம் ஏற்படலாம். சிலருக்கு படபடப்பு, மயக்கம், மரணம்கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.
உடல் அதிக சோர்வடைவதை மன அழுத்தம், படபடப்பு, வேலையில் கவனமின்மை போன்ற அறிகுறிகளால் கண்டுபிடிக்கலாம்.
இப்படி ஏற்பட்டால் உடலை கவனிக்க வேண்டும். கடைசியாக எப்போது சிறுநீர் கழித்தோம், அதிக வெயிலில், வெப்பமான அறையில் உட்கார்ந்திருந்தோமா என்று யோசிக்க வேண்டும்.
வேலை செய்யும் போது திடீரென அமைதியின்மை, கவனமின்மை, குழப்பம் மற்றும் தலைவலி ஏற்பட்டால் காரணத்தை யோசித்து உடலுக்கு நீர்ச்சத்து கொடுக்க வேண்டும். உப்பு கலந்த மோர் அல்லது எலுமிச்சை பானம் அல்லது இளநீர் உடனடியாக குடிக்க வேண்டும்.
தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். குளிர்ந்த தண்ணீர், செயற்கை குளிர்பானங்களை குடிக்கக்கூடாது. உடலின் வெப்பநிலையில் திடீர் திடீரென வெப்பம், குளிர்ச்சி என உருவாக்கும் வகையில் உடலை வருத்தக்கூடாது.
உடல் சோர்வால் ஏற்படும் உடல் அழுத்த பிரச்னைகளை கவனிக்காவிட்டால் பிரச்னை பெரிதாகி விடும். இது மன அழுத்தத்தால் வருவதில்லை. உடல் கேட்கும் ஓய்வை தரவேண்டும். பி.பி., சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.
மதிய நேரத்தில் வெளியில் செல்வது, பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளை வெயிலில் அதிகம் விளையாட விடக்கூடாது. அவர்களுக்கு ஏற்படும் உடல் அசவுகரியங்களை சொல்லத் தெரியாது என்பதால் கூடுதல் கவனம் தேவை.
அடுப்படி காற்றோட்டமாக இருக்க வேண்டும். அங்குள்ள வெப்பத்தை வெளியேற்றும் வகையில் 'எக்ஸாஸ்டர் பேன்' அல்லது 'சிம்னி' இருக்க வேண்டும்.
தொடர்ந்து சமையலில் ஈடுபட்டால் வியர்வையால் படபடப்பு, உடல் சோர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க அவ்வப் போது வெளியே வந்து காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

