பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: ஆப்கனில் அப்பாவி மக்கள் 12 பேர் பலி
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: ஆப்கனில் அப்பாவி மக்கள் 12 பேர் பலி
UPDATED : அக் 15, 2025 09:31 PM
ADDED : அக் 15, 2025 03:37 PM

காபூல்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான மோதல் முற்றியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்த ஆதரவு சில நேரங்களில் அவர்களுக்கே எதிராக திரும்புவதும் உண்டு. தற்போது டி.டி.பி., எனும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு, பாகிஸ்தானுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள அரசை கவிழ்த்துவிட்டு, ஆப்கானிஸ்தானில் உள்ளது போன்று தலிபான் ஆட்சியை செயல்படுத்த இந்த பயங்கரவாத அமைப்பு முயற்சிப்பதாக பாக்., புகார் தெரிவித்து உள்ளது.
ஆனால், இந்த அமைப்புக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தலிபான்கள் கூறி வருகின்றனர். பாகிஸ்தான் கைபர் பக்துங்க்வா மாகாணம், ஆப்கானிஸ்தானுடன் நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இது மலைகள் நிறைந்த பகுதி. இப்பகுதிகளில், டி.டி.பி., மற்றும் அதன் துணை அமைப்புகள் மறைவிடங்களை அமைத்துக் கொண்டு, அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
பாகிஸ்தான் விமானப்படை ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைந்து, வான்வழி தாக்குதல் நடத்தி குண்டுமழை பொழிந்தன. இது, டி.டி.பி.,யின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என கூறப்படுகிறது. இதில் மெஹ்சுத்தின் மகன் கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, துரந்த் எனும் எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது, தலிபான் படைகள் இரவு சரமாரியாக தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில், 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் அரசின் தலைமை செய்தி தொடர்பாளர் சபீஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். இதனை பாகிஸ்தான் மறுத்து இருந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாணத்தின் ஸ்பின் போல்டக் மாவட்டத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஆப்கனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் 12 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து ஆப்கனை ஆட்சி செய்யும் தலிபான்களும் பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் சேதம் குறித்து பாகிஸ்தான் எதுவும் கூறவில்லை.
8 பேர் பலி
இதனைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தலிபான்கள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
காந்தகாரில் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் காந்தகாரில் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் தலிபான்களின் முகாம்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்தம்
இதனிடையே பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தம் செய்ய கத்தார், சவுதிக்கு அழைப்பு
இரு தரப்பினர் இடையே மோதல் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், பாகிஸ்தான் அழைப்பு விடுத்த பேச்சுவார்த்தைக்கு வர ஆப்கன் தரப்பு மறுத்து விட்டது. இதையடுத்து கத்தார், சவுதி அரேபியா நாடுகள் முன்னின்று மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.