நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சினால் நிலநடுக்கம்?: ஸ்பெயின் உணர்த்திய பாடம்
நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சினால் நிலநடுக்கம்?: ஸ்பெயின் உணர்த்திய பாடம்
ADDED : மே 20, 2024 12:16 AM

ஸ்பெயினின் லோர்கோ நகரில், பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு, நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சியதே காரணம் என்று கண்டறியப்பட்டது. அதனால், தமிழகத்தில் அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சும், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், நிலநடுக்கம் ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
கோவை சுற்றுவட்டார பகுதிகளில், தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. அருகருகே அளவுக்கு அதிகமாக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதும், இதற்கு முக்கிய காரணம்.
சமீபகாலமாக, கோவை மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், விவசாயம் மற்றும் குடியிருப்புக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து, லாரிகளில் தண்ணீர் எடுத்து விற்கப்படுகிறது.
கடந்த 2018ல், இதேபோன்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போதும், இதே அத்துமீறல் அதிகமாக நடந்தது. இதை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு, 97 நிறுவனங்கள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
ஆனாலும், அளவுக்கு அதிகமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, பூமிக்கு அதிகமாக அழுத்தம் தரப்படுவதால், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆர்வம் இல்லை
அதேநேரத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அதிகளவில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, வணிக நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, விற்கப்படுவதாகவும் புகார் கூறப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை 'சிறுதுளி' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:
தமிழகத்தில் காலங்காலமாக, ஆறு, குளம், ஏரிகளில் நீர் சேமிக்கப்பட்டு வந்தது. நீர்வளம் மிக்க மாநிலமாகவே தமிழகம் இருந்து வருகிறது.
நீரை சேமிப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. இன்று குளம், குட்டைகளில் சாக்கடை நீர் தான் தேங்கியிருக்கிறது. தொடர்ந்து இது சேகரமாகும் போது, நிலத்தடி நீரும் மாசுபடும். வரக்கூடிய காலங்களில் நீரை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தில் கோவை உட்பட பல மாவட்டங்களில், அளவுக்கு அதிகமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சி கொண்டிருக்கிறோம்.
ஆனால், அதை நிலத்துக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கையில் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை.இஸ்ரேலில் ஆண்டுக்கு, 100 மி.மீ., மழை தான் பெய்கிறது. இதை வைத்து, முறையான கட்டமைப்புகளை கொண்டு விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நீரை வீணாக்குவதில்லை.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அரசு கடுமையாக்க வேண்டும். அதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். வரக்கூடிய காலங்களில் மிகப்பெரிய பிரச்னையாக தண்ணீர் மாறப் போகிறது. மழை காலங்களில், மழை நீர் வீணாக கடலுக்கு செல்வதை தவிர்க்க, மழை நீர் சேகரிப்பு அவசியம்.
நிலநடுக்க அபாயம்
பூமிக்கு அதிகளவு அழுத்தம் தரப்படுவதால், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, புவியியல் துறை நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், நிலநடுக்க பட்டியலில், கோவை உட்பட சில நகரங்கள் இடம் பெற்றுள்ளது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்துளை கிணறுகள் அதிகளவு அமைத்து பூமியை தொடர்ந்து காயப்படுத்துகிறோம்.
ஆழ்துளை கிணறுகள் அமைப்பதில் சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அதிகளவு ஆழ்துளை கிணறுகள் அமைக்காமல், நிலையை எப்படி சமாளிக்க முடியும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
நீர் சேகரிப்பு முறையை, நிச்சயம் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கான வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
நீர் சேகரிப்பு குறித்து, மக்கள், தொழில் துறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில், 'சிறுதுளி' அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆழ்துளை கிணறுக்கு கட்டுப்பாடு தேவை
கோவை அரசு கலைக்கல்லுாரி புவி அமைப்பியல் துறையின் தலைவர் கவுதம் கூறியதாவது:
ஸ்பெயினின் லோர்கோ நகரில், 2012ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு, நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சியதே காரணம் என்று கண்டறியப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 பதிவானது; ஒன்பது பேர் பலியாயினர். பிரதான கட்டடங்கள் பல இடிந்தன.
கோவையை பொறுத்தவரை, இந்த பகுதி மிகவும் கடுமையான பாறைகளால் உருவானது. 'ஆர்க்கியன்' காலகட்டத்தில் (2,500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) உருவான பாறை என்பதால், நிலையான பகுதி என்று கருதப்படுகிறது.
இந்த பகுதியில், 1900ம் ஆண்டுகளில், 6.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, அதில், 70 முதல் 80 வரை உயிர் சேதங்கள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கடினமான பாறைகளில் இயற்கையாகவே உருவான பிளவுகளில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இதுபோன்ற கடுமையான பாறைகளாலான பகுதிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. அதிகப்படியான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவதால், கடுமையான பாறைகளில் செயற்கையான பிளவுகள் ஏற்பட்டு சிதைந்து போக வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற ஆழ்துளை கிணறுகள் அமைப்பதில் ஓரளவு கட்டுப்பாடு விதித்தால், பாறைகளின் கடினத்தன்மை நிலைத்திருக்கும்.
எனவே, மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, மிகவும் தேவைப்படும் இடங்களில் மட்டும் ஆழ்துளை கிணறுகள் அமைக்க, வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவுதம்,
- நமது நிருபர் -

