தேர்தல் செலவினத்துக்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை! புலம்பி தவிக்கும் அதிகாரிகள்
தேர்தல் செலவினத்துக்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை! புலம்பி தவிக்கும் அதிகாரிகள்
ADDED : மே 03, 2024 02:01 AM

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடத்தியதற்கு இன்னும் நிதி விடுவிக்கப்படாததால், அப்பணிகளை பொறுப்பேற்று செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்ரல் 19ல் நடந்தது. இதற்கான அறிவிப்பு, மார்ச் 16ல் வெளியிடப்பட்டது; அன்றைய தினமே நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. சட்டசபை தொகுதி வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன; கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன. எம்.எல்.ஏ., அலுவலகங்கள் மூடப்பட்டன. பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள், வீடியோ குழுக்கள் உருவாக்கப்பட்டு வாகனங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் ஜி.பி.எஸ்., கருவி, 360 டிகிரி கோணத்தில் சுழலும் கேமரா உள்ளிட்டவை பொருத்தப்பட்டன.
தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன; 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தீவிர விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஒவ்வொரு படிநிலையாக ஏகப்பட்ட பணிகள், தேர்தல் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான செலவினம் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
ஓட்டுப்பதிவு முடிந்து, 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பணம் வழங்காததால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கின்றனர். இன்னும் பணம் ஒதுக்கீடு வரவில்லை எனக்கூறி, அவர்களை தேர்தல் பிரிவினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
பல லட்சம் ரூபாய் பாக்கி
தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக தேர்தல் பணியின் போது, ஆரம்பத்தில் 50 சதவீத நிதி; தேர்தல் முடிந்ததும் மீதமுள்ள நிதி விடுவிக்கப்படும். இம்முறை தொகை இப்போது வரை ஒதுக்கப்படவில்லை. பேப்பர் பண்டல் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் வாங்கியதில் துவங்கி, அலுவலர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தது, டீ, காபி வாங்கிக் கொடுத்தது, வாகனங்களுக்கு டீசல் நிரப்பியது மற்றும் வாடகை கொடுப்பது, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல லாரிகள் தருவித்தது உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் செய்யப்பட்டன. இதற்குரிய தொகை அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
பணம் கேட்டு, அந்தந்த நிறுவனத்தினர் அலுவலகத்துக்கு தினமும் வருகின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. டீ, காபி, உணவு கொடுத்தவர்களுக்கு எத்தனை நாள் நிலுவை வைப்பது. ஒவ்வொரு நிறுவனத்தினருக்கும் பல லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதற்குரிய நிதியை விரைந்து விடுவிக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -