அப்பாடா! பீஹாரில் இழுபறிக்கு பின் முடிந்தது பங்கீடு: லாலு பிரசாத் கட்சிக்கு 26; காங்கிரசுக்கு 9
அப்பாடா! பீஹாரில் இழுபறிக்கு பின் முடிந்தது பங்கீடு: லாலு பிரசாத் கட்சிக்கு 26; காங்கிரசுக்கு 9
ADDED : மார் 30, 2024 02:26 AM

பாட்னா:பீஹார் லோக்சபா தொகுதியின் முதல்கட்ட ஓட்டுப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த மறுநாளான நேற்று, யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்ற உடன்படிக்கையை மகாகட்பந்தன் கூட்டணி கட்சியினர் அறிவித்தனர். ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், கா ங்கிரஸ் ஒன்பது தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்திற்கான லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது.
இங்கு, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணியை எதிர்த்து, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணியினர் போட்டியிடுகின்றனர்.
'இண்டியா' கூட்டணி
இந்த கட்சிகள் தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான 'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இக்கூட்டணியினரின் தொகுதிப் பங்கீடு பேச்சில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலவி வந்த நிலையில், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்ற அறிவிப்பு நேற்று ஒரு வழியாக அறிவிக்கப்பட்டது.
முதல்கட்ட ஓட்டுப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், அதற்கு மறுநாளான நேற்று இந்த அறிவிப்பு வெளியானது.
ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான மனோஜ் குமார் ஜா, மாநில காங்., தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் உட்பட, கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டனர்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார்.
பீஹாரில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளான 26 இடங்களில் போட்டியிடுகிறது.
கடந்த 2019 தேர்தலில் இவர்கள் போட்டியிட்டதை விட, கூடுதலாக ஒன்பது தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்பட்டு உள்ளன. காங்கிரஸ் கட்சி ஒன்பது இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி மூன்று இடங்களிலும், இந்திய கம்யூ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றன.
பப்பு யாதவ் நிலை?
கடந்த சில தேர்தல்களாக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வந்த புர்னியா தொகுதியை இம்முறை ராஷ்ட்ரீய ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது.
புர்னியா தொகுதியில் இருந்து மூன்று முறை வெற்றி பெற்று எம்.பி.,யாக பதவி வகித்த ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்பு யாதவ், சமீபத்தில் தன் கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்தார்.
மீண்டும் புர்னியா தொகுதியில் இருந்து போட்டியிடலாம் என்ற அவரது கனவு தற்போது பகல் கனவாகி உள்ளது.
புர்னியா இல்லையெனில், மாதேபூர் அல்லது சுபால் தொகுதி அவருக்கு ஒதுக்கப்படும் என, காங்., தலைமை உறுதி அளித்து இருந்தது. ஆனால், அதிலும் தற்போது மண் விழுந்துவிட்டது.
இந்த இரண்டு தொகுதி களையும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தன் வசப்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, பப்பு யாதவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
''தேவை ஏற்பட்டால், புர்னியா தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட தயங்க மாட்டேன்,'' என அவர் கூறியிருப்பது, அரசியல் களத்தில் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மை வகிக்கும் கிஷன்கஞ்ச், கதிஹார், பாட்னா சாஹிப், பாகல்பூர், சாசாராம், முசாபர்நகர், சமஸ்திபூர், மேற்கு சம்பாரன், மகாராஜ்கஞ்ச் உள்ளிட்ட தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரண் தொகுதியில், சிங்கப்பூரில் வசிக்கும் அவரது மகள் ரோஹினி ஆச்சார்யாவும், பாடலிபுத்ரா தொகுதியில் மூத்த மகள் மிசா பாரதியும் போட்டியிடுவர் என கூறப்படுகிறது.
ஹாஜிபூர் தொகுதியில், ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளரை களம் இறக்க உள்ளது.

