'வடபோச்சே' என்ற நான்கைந்து எம்.எல்.ஏ.,க்கள்; 'அப்பாடா' மனநிலையில் ஐந்தாறு அமைச்சர்கள்
'வடபோச்சே' என்ற நான்கைந்து எம்.எல்.ஏ.,க்கள்; 'அப்பாடா' மனநிலையில் ஐந்தாறு அமைச்சர்கள்
ADDED : ஆக 23, 2024 04:05 AM

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில், கட்சிக் கொடியை நேற்று நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி, தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட்டது.
இழுபறி
அதே நேரத்தில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் என்ற, 'பிரேக்கிங்' செய்தியும் வெளியிடப்பட்டது. மூத்த அமைச்சர் ஒருவர் உட்பட மூன்று பேர் மாற்றப்படுகின்றனர்; அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சிலரது இலாகாக்கள் மாற்றப்படுகின்றன என்ற தகவல் பரவியதால், யார் அந்த மூத்த அமைச்சர், புதிய அமைச்சர்கள் யார் என்ற கேள்விகளும், விவாதங்களும் அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பின.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவுக்கு செல்லும் முன், உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என, அவரது குடும்பத்தில் திட்டமிடப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததும் அவரை சேர்க்கும் விதமாக, அமைச்சரவையில் மாற்றம் செய்யவும், துணை முதல்வர் பதவியை துரைமுருகனுக்கு தரவும் முதல்வர் திட்டமிட்டதாக தெரிகிறது. ஆனால், புதிய அமைச்சராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, திருவள்ளூர் எம்.எல்.ஏ., பி.வி.ராஜேந்திரன், பனைமரத்துபட்டி ராஜேந்திரன், கோவி செழியன், துரை சந்திரசேகரன், சங்கரன்கோவில் ராஜா, காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன.
மாற்றம் இல்லை
மாற்றப்படும் அமைச்சர்கள் பட்டியலில், காந்தி, கயல்விழி, மஸ்தான், சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், மதிவேந்தன் உள்ளிட்டோர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இது தொடர்பாக முதல்வரிடம் பேசி, 'அமைச்சரவையில் மாற்றம் இல்லை' என்ற பதிலை பெற்று, சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.
அதன்பின், மாற்றம் இல்லை என்ற செய்தி பரவத் துவங்கியதும், அமைச்சர் பதவியை எதிர்பார்த்த நான்கைந்து எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரத்தில், பதவி போய் விடுமோ என்ற பதைபதைப்பில் இருந்த ஐந்தாறு அமைச்சர்கள் நிம்மதி அடைந்தனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -