சிறப்பு டாக்டர்களை நேரடியாக நியமிக்க கூடாது; அரசு டாக்டர்கள் சங்கம் போர்க்கொடி
சிறப்பு டாக்டர்களை நேரடியாக நியமிக்க கூடாது; அரசு டாக்டர்கள் சங்கம் போர்க்கொடி
UPDATED : பிப் 22, 2025 04:19 AM
ADDED : பிப் 21, 2025 10:46 PM

சென்னை:அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 658 சிறப்பு டாக்டர்கள் நியமனத்தில், நேரடி சேர்க்கை நடத்துவதற்கு, அரசு டாக்டர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, 2,642 அரசு டாக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள், மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக, டி.சி.எஸ்., நிறுவன உதவியுடன் நடந்து வருகின்றன. வரும், 26ம் தேதி தேர்வு செய்யப்பட்ட உதவி டாக்டர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
நேரடி சேர்க்கை
அதேபோல, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில் காலியாக உள்ள, 207 மகப்பேறு டாக்டர்கள் உட்பட, 658 சிறப்பு டாக்டர்கள் பணியிடங்கள், நேரடி சேர்க்கை வாயிலாக நிரப்பப்படும் என, அரசு தெரிவித்து உள்ளது.
சிறப்பு டாக்டர்கள் பணியிடங்கள் நேரடி சேர்க்கை வாயிலாக நிரப்பப்பட்டால், பண பலம் படைத்தவர்கள் தான் நியமிக்கப்படுவர். இவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி, அரசு டாக்டர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
நேரடி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலரிடம் மனு அளித்துள்ளோம். அதற்காகவே உருவாக்கப்பட்ட எம்.ஆர்.பி., வாயிலாக மட்டுமே நிரப்ப வேண்டும். நேரடி சேர்க்கை என கொண்டு வந்தால், எம்.ஆர்.பி.,யை மூடி விடுவரா என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு சங்க செயலர் ராமலிங்கம் கூறியதாவது:
அரசு பணிக்கு டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக டாக்டர்களை தேர்வு செய்யும் போது, காலதாமதமாகிறது என்பதால் தான், எம்.ஆர்.பி., ஆரம்பிக்கப்பட்டது. காலி பணியிடங்கள் உருவாகும் போது, அவற்றை நிரப்பாமல் விடுகின்றனர்.
அவசரம்
தற்போது, 658 டாக்டர்கள் நியமனத்தில், எம்.ஆர்.பி., வாயிலாக நிரப்பினால் தாமதம் ஏற்படும் என, நேரடி சேர்க்கை என்று தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு காலி பணியிடங்கள் உருவாகப் போகின்றன என்பது, அரசுக்கு தெரியும். அதற்கேற்ப, மருத்துவ பணியிடங்களை, எம்.ஆர்.பி., வாயிலாக நிரப்பலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறுகையில், ''மக்கள் நல்வாழ்வு துறையில், பணி நியமனம், கலந்தாய்வு போன்றவை வெளிப்படை தன்மையோடு நடந்து வருவதாக, அமைச்சர் கூறுகிறார். அவசரம் என்ற காரணத்தை கூறி, நேரடி சேர்க்கை வாயிலாக, தவறான முன்னுதாரணத்தை அரசு ஏற்படுத்த வேண்டாம்,'' என்றார்.