பகிங்ஹாம் கால்வாய் வழியாக முகத்துவாரத்தில் கலக்கும் எண்ணெய் கழிவுகளால் அபாயம்
பகிங்ஹாம் கால்வாய் வழியாக முகத்துவாரத்தில் கலக்கும் எண்ணெய் கழிவுகளால் அபாயம்
UPDATED : ஆக 01, 2024 03:18 AM
ADDED : ஆக 01, 2024 01:07 AM

திருவொற்றியூர் பகிங்ஹாம் கால்வாய் வழியாக எண்ணுார் முகத்துவாரத்தில் கலக்கும் எண்ணெய் கழிவுகளால், கடல் வளம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மிக்ஜாம் புயலின் போது புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளநீர், தொழிற்சாலைகளின் ஆயில் கழிவுகள் கலந்து வந்து, திருவொற்றியூர் மேற்கின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் எண்ணுார் முகத்துவார பகுதிகளில் படர்ந்து, பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
மீனவர்களின் வலை, படகுகள், மேற்கு பகுதிகளான ஜோதி நகர், எர்ணாவூர் உள்ளிட்ட பல நகர்களின் வீடுகளிலும், எண்ணெய் திட்டு படிந்து, நேரடி பாதிப்பை உண்டாக்கியது. பின், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
![]() |
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், சுத்திகரிக்கப்படாமல் பகிங்ஹாம் கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்பிரச்னையில் புகார் தெரிவித்தும், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மவுனம் சாதித்து வருவதாக, மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:
இப்பிரச்னைகள் காரணமாக, பகிங்ஹாம் கால்வாய - முகத்துவாரம், கழிமுகம் பகுதிகளில் மீன்களின் இனப் பெருக்கம் கடுமையாக பாதிக்கும். இந்த ஆற்று பகுதியை நம்பி பிழைப்பு நடத்தும், 3,000 க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது.
எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய கவனித்து, சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், சுத்திகரிக்கப்பட்டு பகிங்ஹாம் கால்வாயில் வெளியேற்றப்படுகின்றனவா என, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
சுத்திகரிக்காமல் விடப்படும் எண்ணெய் கழிவுகளால் மீன்கள் மற்றும் ஆற்றில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு, அதை தடுக்க தேவையான நடவடிக்கை மற்றும், தொழிற்சாலைகள் மீதான நடவடிக்கை குறித்து விரிவான ஆய்வறிக்கை சமர்பிக்க வேண்டும்.
அப்போது தான், மீனவர்களுக்கு இது குறித்த அச்சம் நீங்கும். தவறு நிகழும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட நிறுவனம் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.