சீமான் வீட்டு காவலாளி கைது அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
சீமான் வீட்டு காவலாளி கைது அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
UPDATED : மார் 01, 2025 09:06 PM
ADDED : மார் 01, 2025 01:49 AM

சென்னை: சீமான் வீட்டு பணியாளர் மற்றும் காவலாளி ஆகியோர் கைது செய்யப்பட்டது தொடர்பான விவகாரம் குறித்து, அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டில், வளசரவாக்கம் போலீசார், 'சம்மன்' ஒட்டினர்.
ஒட்டப்பட்ட, சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், சீமான் வீட்டு பணியாளர் சுபாகர் மற்றும் வீட்டுக் காவலாளியான முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் ஆகியோருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, சுபாகர், அமல்ராஜ் ஆகியோரை, நீலாங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளி வைத்திருந்த துப்பாக்கியையும், போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ஆயுத தடுப்புச் சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, நேற்று வழக்குகளை விசாரிக்க துவங்கியது. அப்போது, வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் ஆஜராகி, ''சீமான் வீட்டில் சம்மன் வழங்க சென்ற இடத்தில், போலீசார் அத்துமீறி உள்ளனர்.
''வீட்டில் இருந்த இருவரை அழைத்துச் சென்று, சட்ட விரோதமாக வைத்துள்ளனர். இதுதொடர்பாக தாக்கல் செய்ய உள்ள ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்,'' என்று முறையீடு செய்தார்.
அதற்கு நீதிபதிகள், 'சட்டப்படி கைது செய்த நபர்களை, 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும். நீங்கள் கூறுவது போல கைது செய்திருந்தால், அவர்களை ஆஜர்படுத்த போலீசாருக்கு நேரம் உள்ளது.
'எனவே, அதை எல்லாம் நீங்கள் சரிபார்த்த பின், நீதிமன்றத்தை அணுக வேண்டும்' என அறிவுறுத்தி, அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய முறையீட்டை நிராகரித்தனர்.