267 கிலோ கடத்தல் தங்கம் கைமாறியது எப்படி: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
267 கிலோ கடத்தல் தங்கம் கைமாறியது எப்படி: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
ADDED : செப் 01, 2024 01:05 AM

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, 167 கோடி ரூபாய் மதிப்பிலான, 267 கிலோ தங்கம் வெளிமாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில், 60 நாட்களில், 167 கோடி ரூபாய் மதிப்பிலான, 267 கிலோ தங்கம், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், விமான நிலையத்தில், 'ஏர் ஹப்' என்ற பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்திய ஷபீர் அலி என்பவர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவருடன், இலங்கை பயணி உட்பட, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஷபீருக்கு, விமான நிலையத்தில் கடை உரிமம் பெற, பா.ஜ., பிரமுகர் பிரித்வி உதவியதும் கண்டறியப்பட்டு, அவரது சொந்தமான இரண்டு கடைகளிலும், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றினர். கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு, 'சம்மன்' அனுப்பி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடத்தல் தங்கம் கை மாறியது எப்படி, கடத்தல் பின்னணியில் உள்ள சர்வதேச, 'நெட்வொர்க்' எது என்பதை கண்டுபிடிக்க முடியாமல், சுங்கத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
சுங்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடத்தல் தங்கம் கைமாறுவதற்கு, சில முக்கிய புள்ளிகள் உதவி செய்தது தெரியவந்துள்ளது. அவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த புள்ளி வாயிலாக, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, இந்த தங்கம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எங்கே சென்றது, யாருக்காக சென்றது என்ற விசாரணை தொடர்ந்து வருகிறது.
மேலும், விமான நிலைய, 'சிசிடிவி' கேமரா வாயிலாக, சபீர் அலி நடத்திய கடைக்கு, அடிக்கடி வந்த பயணியர் அடையாளம் காணப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.