எனக்கு முதல்வர் பதவி வேண்டும்: கர்நாடக மூத்த எம்.எல்.ஏ., முரண்டு
எனக்கு முதல்வர் பதவி வேண்டும்: கர்நாடக மூத்த எம்.எல்.ஏ., முரண்டு
UPDATED : செப் 02, 2024 04:10 AM
ADDED : செப் 02, 2024 02:03 AM

மைசூரு,: “அமைச்சராக இருந்து, இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. இனி முதல்வர் பதவி வேண்டும்,” என, கர்நாடக காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., தேஷ்பாண்டே கூறி உள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில், முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில், சித்தராமையா பதவி பறிபோகும் என, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
'அண்ணன் எப்ப நகர்வான்; திண்ணை எப்போ காலியாகும்' என்பது போல, சித்தராமையா பதவி விலகினால், முதல்வர் நாற்காலியை பிடிக்க, காங்கிரசில் கடும் போட்டி நிலவுகிறது.
இதன்படி, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் என, பலர் வரிசை கட்டி நிற்கின்றனர். தற்போது, இவர்களுடன் காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., தேஷ்பாண்டே, 77, இணைந்து உள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
உத்தர கன்னடாவின் ஹலியால் தொகுதியில் இருந்து ஒன்பது முறை எம்.எல்.ஏ., ஆகி உள்ளேன். சில முறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளேன்.
அமைச்சராக இருந்து, இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. இனி எனக்கு முதல்வர் பதவி வேண்டும். முதல்வர் சித்தராமையா என் நண்பர் தான். ஆனால், அவரை விட வயதில் நான் தான் மூத்தவன்.
கட்சி மேலிடம் அனுமதி கொடுத்தால், முதல்வர் ஆவேன். ஆனால், அதற்கு சித்தராமையாவின் அனுமதி வேண்டும். அவர் ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பார் என்று நினைக்கிறேன். அவர் மீதான மூடா முறைகேடு தொடர்பாக, ஆவணங்கள் இருந்தால் கொடுங்கள்.
ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக இருந்தபோது, அவர் மீது தொலைபேசி ஒட்டு கேட்பு புகார் எழுந்தது. இதனால், பதவியை ராஜினாமா செய்தார். இப்போதும் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது; அரசியல் சீரழிந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய், நடுத்தர மற்றும் கனரக தொழில், உயர்கல்வி, சுற்றுலா என பல துறைகளின் அமைச்சராக பணியாற்றிய அனுபவம், தேஷ்பாண்டேவுக்கு உள்ளது. 2023 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் பதவி எதிர்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை.
அவரை சபாநாயகராக்கும் முயற்சி நடந்தது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்டார். அதிருப்தியில் இருந்த அவரை, அமைச்சர் பதவிக்கு இணையான கர்நாடக நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவராக அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.