ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பு: திணறுகிறது கோவை சந்திப்பு!
ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பு: திணறுகிறது கோவை சந்திப்பு!
ADDED : ஜூலை 01, 2024 04:37 AM

கோவை ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளுக்கு நடக்க வழியின்றியும், மக்களின் வாகனங்களை நிறுத்த விடாமலும் ஆக்கிரமித்துள்ள ஆட்டோ ஸ்டாண்டை, அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கோவை ரயில்வே ஸ்டேஷன் முன், ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை, நாளுக்கு நாள் பெரும் பிரச்னையாக விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்த சந்திப்பின் முன்பாகவுள்ள ரோடு, மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில், இரு வழிகளிலும் வாகனங்களை அனுமதிப்பதுடன், நடுவில் 'டிவைடர்'களும் வைத்திருப்பதால், நாள் முழுவதும் இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ரயில் மிஸ் ஆகிறது
இதன் காரணமாக, ரயில்களைப் பிடிக்க வரும் பயணிகளின் வாகனங்கள், ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் வர முடிவதில்லை. அந்த வாகனங்களில் வரும் பயணிகள், குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுடன் வருவோர், பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த ரோட்டில் ஏற்படும் நெரிசலால், ரயில்களை பலரும் தவற விடுவதும் அன்றாடம் நடக்கிறது.
இந்த பிரச்னைகள் ஒரு புறமிருக்க, இந்த ரயில்வே ஸ்டேஷனின் முன்பாகவுள்ள ஆட்டோ ஸ்டாண்டால், பயணிகளுக்கான நடைபாதை முற்றிலுமாக மறிக்கப்பட்டுள்ளது. நடைபாதையை மறித்து, ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதற்கு, எந்தத் துறையும் அனுமதி அளிக்கவில்லை; அனுமதி அளிக்கவும் முடியாது.
அனுமதியின்றி, நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோ ஸ்டாண்ட்டுக்கு முன்பாக பயணிகள் வரும் சொந்த வாகனங்கள், கால் டாக்ஸி உள்ளிட்ட வாடகை வாகனங்கள் எதையும் ஒரு நிமிடம் நிறுத்துவதற்கும், ஆட்டோ டிரைவர்கள் அனுமதிப்பதில்லை. வண்டியை நிறுத்தி, பயணிகளை இறக்கி, லக்கேஜ் எடுப்பதற்குள், வண்டியை எடுக்கச் சொல்லித் துரத்துவதால், தினமும் தகராறு நடக்கிறது.
சென்னை போல் தேவை
இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இந்த ஆட்டோ ஸ்டாண்டை நிரந்தரமாக அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 2017ல், சென்னையில் நடைபாதையில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் தொடர்பான வழக்கில் (WP No. 9807/2017), 'பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை முன்னறிவிப்பின்றி அகற்றலாம்' என்று, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட் உத்தரவைக் குறிப்பிட்டு, இந்த ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, பல்வேறு சமூக அமைப்புகளும், கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பான நடவடிக்கை குறித்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவசங்கர் என்பவர், தகவல்களையும் வாங்கியுள்ளார்.
அதில், 'கோவை சந்திப்பு முன்பாக 180 ஆட்டோக்கள், இரவு, பகலாக சுழற்சி முறையில் நிறுத்தப்படுவதாகவும், அவற்றில் 33 ஆட்டோக்களை நாள் வாடகை ரூ.20க்கு, சந்திப்பு வளாகத்துக்குள் நிறுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது; மற்ற ஆட்டோக்களையும் ஒரு மாதத்துக்குள் நிறுத்த அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளனர்' என்ற புதிய தகவலைத் தெரிவித்துள்ளனர்.
அதற்குப் பின், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இருக்காது என்று டிரைவர்கள் உறுதியளித்துள்ளனர்; இதுகுறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கோவை மாநகர போலீஸ் போக்குவரத்து கிழக்கு உதவி கமிஷனர் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.
இதனால், கோவை சந்திப்பில் ஆட்டோக்களால் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு, எப்போது நிரந்தரத் தீர்வு கிடைக்குமென்பதற்குதான், விடை தெரியவில்லை.
-நமது நிருபர்-