6ம் வகுப்பில் இருந்தே சிறப்பு பயிற்சி அரசு பள்ளிகளில் அளிக்கப்படுமா?
6ம் வகுப்பில் இருந்தே சிறப்பு பயிற்சி அரசு பள்ளிகளில் அளிக்கப்படுமா?
ADDED : மே 11, 2024 12:04 AM

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பில் இருந்தே போட்டி தேர்வுகளுக்கு தயாராக பயிற்சி அளிக்கும் திட்டத்தை அரசு துவக்க வேண்டும்.
மருத்துவம் உள்ளிட்ட அனைத்து முக்கிய படிப்புகளுக்கும் போட்டி தேர்வுகளே அளவுகோலாகி விட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்களை தாண்டி, போட்டி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே உயர் கல்வியில் சீட் கிடைக்கிறது.
எனவே, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்தின. தற்போது ஒரு படி மேலே சென்று, போட்டி தேர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆறாம் வகுப்பில் இருந்தே நீட் உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக, பள்ளியிலேயே சிறப்பு ஆசிரியர்களை நியமித்து பயிற்சி அளிக்கின்றனர்.
மேலும், பிரபலமான பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பல தனியார் பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, தனியாக கட்டணமும் பெறப்படுகிறது.
இந்த மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு வரும்போது, மேலும் பல பிரத்யேகமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனால், தனியார் பள்ளி மாணவர்கள் அகில இந்திய நுழைவு தேர்வுகளில் சாதிக்கின்றனர். அதே சமயம், அரசு பள்ளிகளில் இப்போது தான் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் போட்டி தேர்வுக்கான பயிற்சியை துவக்கி உள்ளனர். பெயரளவுக்கு நடத்தப்படும் இரண்டு ஆண்டு கால பயிற்சி வகுப்பு, தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போடும் அளவிற்கு இல்லை.
அரசு பள்ளிகளில் பெரும்பாலும் நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே படிக்கின்றனர். இவர்களுக்கு தனியார் கோச்சிங் சென்டர்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை. எனவே, அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் இருந்தே நீட், ஜே.இ.இ., போன்ற படிப்புகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராக பயிற்சி அளிக்கும் சிறப்பு திட்டத்தை அரசு தீட்ட வேண்டும். அப்போதுதான், தனியார் பள்ளி மாணவர்களுடன் அரசு பள்ளி மாணவர்கள் போட்டி போட்டு உயர் கல்விக்கு செல்ல முடியும்.
- நமது நிருபர்