ரயில்வே ஸ்டேஷனா... தனியார் நிறுவனமா? வரவேற்கிறது தனியார் விளம்பரம்; குழம்பும் பயணிகள்
ரயில்வே ஸ்டேஷனா... தனியார் நிறுவனமா? வரவேற்கிறது தனியார் விளம்பரம்; குழம்பும் பயணிகள்
UPDATED : ஜூலை 17, 2024 03:59 AM
ADDED : ஜூலை 17, 2024 01:14 AM

கோவையில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான முக்கிய இடங்களில், தனியார் நிறுவன விளம்பரங்களைக் கொண்ட பெயர்ப்பலகைகள் வைப்பது, மீண்டும் அதிகரித்து வருகிறது.
கோவை நகரில், மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான அலுவலகங்களிலும், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்கள், மைதானங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் முகப்புப் பகுதியில், வழிகாட்டும் இடங்களிலும் பெயர்ப்பலகைகள் வைக்கப்படுகின்றன. இவற்றை வைக்கும் பொறுப்பு, அந்தந்த துறையினருக்கே உள்ளது.
அரசுக்குச் சொந்தமான இந்த இடங்களில், பெயர்ப்பலகைகள் வைப்பதற்கும், அரசு நிதி ஒதுக்கி வருகிறது. ஆனால் அந்த பெயர்ப்பலகைகளிலும் ஓசிக்காகவும், காசுக்காகவும் தனியார் நிறுவனங்களின் விளம்பரம் வைக்க, அனுமதிப்பது வாடிக்கையாகவுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், போலீஸ் ஸ்டேஷன்கள் உட்பட அனைத்து இடங்களிலும் இந்த 'ஸ்பான்சர்' பெயர்ப்பலகைகள் அதிகரித்து வந்தன.
இதற்கு எதிராக, பல்வேறு நுகர்வோர் மற்றும் சமூக அமைப்புகளும் போர்க்கொடி துாக்கின. ஒரு நிறுவனத்தின் விளம்பரத்துடன், பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ள போலீஸ் ஸ்டேஷனில், அந்த நிறுவனத்தின் மீதே ஒருவர் புகார் கொடுக்க வந்தால், அதை எப்படி அந்த போலீசார் கையாள்வார்கள் என்று சட்டரீதியாகவே, சிலர் கேள்வியும் எழுப்பினர்.
அதன் பிறகு, அரசு உத்தரவிட்டதன்பேரில், அரசு அலுவலகங்களில் உள்ள பெயர்ப் பலகைகளை, அந்தந்த துறையினரே அமைத்துக் கொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட்டது. விளம்பரங்கள் இடம் பெற்றிருந்த, பெரும்பாலான பெயர்ப் பலகைகள் சில ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டன.
மீண்டும் விளம்பரம்
சமீபகாலமாக மீண்டும் இந்த 'ஸ்பான்சர் பெயர்ப் பலகை' விதிமீறல், தலைதுாக்கத் துவங்கியுள்ளது.
அது மட்டுமின்றி, பெயர்ப்பலகைக்கு அருகில் அதை விட பெரிதாக விளம்பரம் வைத்து, வருவாய் பார்ப்பதும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கோவை ரயில்வே ஸ்டேஷன் முகப்பில், 'கோவை சந்திப்பு' என்ற பெயர்ப்பலகையை விட, தனியார் நிறுவனத்தின் விளம்பரம் மிகப் பெரியதாக இடம் பெற்றுள்ளது. அதைப் பார்த்தால், அது ரயில்வே சந்திப்பா, அந்த நிறுவனத்தின் தலைமையிடமா என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே, ரயில்வேக்குச் சொந்தமான இடங்களில், ரயில்களில் வருவோர் பார்க்கும் வகையில் இல்லாமல், ரோட்டில் வரும் வாகனங்களில் வருவோர் பார்க்கும் வகையில், பெரிய பெரிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவது குறித்து, கோர்ட்டின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றையும் அகற்றாமல், கோர்ட் தடையுத்தரவு பெற்றுக் கொண்டு, ஆண்டுக்கணக்கில் விதிமீறல் விளம்பரங்களை, ரயில்வே துறை வைத்துக் கொண்டிருக்கிறது.
அதன் உச்சமாக, ரயில் சந்திப்பையே மொத்தமாக விற்றதைப் போல, பெயர்ப் பலகையுடன் விளம்பரம் வைத்திருப்பது, பொது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இதில் துறைக்குக் கிடைக்கும் வருவாயை விட, துறை அதிகாரிகளே நன்கு வருவாய் பார்ப்பது தெளிவாகத் தெரிகிறது.
-நமது நிருபர்-