வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் திருவொற்றியூர் தப்புமா? 'பகிங்ஹாம்' கால்வாய் மதகு பணி முடியாததால் அச்சம்
வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் திருவொற்றியூர் தப்புமா? 'பகிங்ஹாம்' கால்வாய் மதகு பணி முடியாததால் அச்சம்
UPDATED : ஆக 20, 2024 10:39 AM
ADDED : ஆக 20, 2024 06:20 AM

திருவொற்றியூர்: சென்னையின் நீராதாரமான திருவள்ளூர், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டும்போது, உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும்.
அதே போல், செங்குன்றம் அருகே அமைந்துள்ள புழல் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டும் போது, புழல் உபரி நீர் கால்வாயில் திறந்து விடப்படும். மேற்கண்ட இரு நீர்வழித்தடங்களும், எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.
கடந்த 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு, 90,000 கன அடி உபரி நீரும், புழலில் இருந்து, 14,000 கன அடி உபரி நீரும் என, 1 லட்சம் கன அடிக்கும் அதிகமான உபரி நீர் கடலை நோக்கி ஆர்ப்பரித்தது.
ஊருக்குள் புகுந்தது
அதேநேரம் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டதால், முகத்துவார பகுதியில் பெருக்கெடுத்து வந்த 1 லட்சம் கன அடி தண்ணீரை, கடல் உள்வாங்குவது சாத்தியமில்லாமல் போனது.
முகத்துவாரம் துார் வாரப்படாதது மற்றொரு காரணமாக இருந்தது. இதையடுத்து, கடல் நோக்கி ஆர்ப்பரித்த தண்ணீர் நீரோட்டம் குறைவாக இருந்த பகிங்ஹாம் கால்வாய் வழியாக, பின்னோக்கி பாய்ந்தது. பகிங்ஹாம் கால்வாய் இணைப்பு கால்வாய்களில் கரைபுரண்டோடி எர்ணாவூர், திருவொற்றியூர் மேற்கு, ஆர்.கே.நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் புகுந்து, ஒரே நாளில் வெள்ளக்காடாக மாறியது.
குடியிருப்புகளில் 5 முதல் 7 அடி உயரம் வரை வெள்ளம் சூழ்ந்ததால். மக்கள் அவசர தேவைகளுக்கு வெளியில் வரமுடியாதபடி இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழை வெள்ள பாதிப்பு குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, பகிங்ஹாம் கால்வாய் இணைப்பு பிரதான கால்வாய்களுக்கு, 'திருகு' வடிவ மதகுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக, வெற்றி விநாயகர் நகர், சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகரில் தலா ஒன்றும், ராஜாஜி நகர், எர்ணாவூரில் தலா இரண்டும், கார்கில் நகரில் மூன்று என, 10 இடங்களில் மதகுகள் அமைக்கப்பட்டன.
இதன் காரணமாக, அடுத்த வெள்ள பாதிப்புகளின் போது, இணைப்பு கால்வாய்கள் வழியாக, வெள்ள நீர் உட்புகும் பிரச்னை சற்று குறைந்து உள்ளது.
ஆனால் எர்ணாவூர், ஜோதி நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகரில், கடந்த காலங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
ஏதுமில்லை
இதற்கு காரணம், எர்ணாவூர் - முல்லை நகர் சந்திப்பு அருகே, நிறுவனங்கள் இடையே செல்லும் கால்வாய் ஒன்றிற்கு பகிங்ஹாம் கால்வாயுடன் இணையும் இடத்தில், மதகுகள் ஏதுமில்லை.
அதேபோல, சத்தியமூர்த்தி நகர், மாநகராட்சி பள்ளி தெரு வழியாக, பகிங்ஹாம் கால்வாயுடன் இணையும் பிரதான கால்வாய்க்கும் மதகு இல்லை.
கடைசியாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது, பகிங்ஹாம் கால்வாயில் இருந்து, இந்த இரு வழிகளில் தான் வெள்ளம் ஆர்ப்பரித்து எர்ணாவூர், ஜோதி நகர், சத்தியமூர்த்தி நகர் குடியிருப்புகளை மூழ்கடித்தது.
அத்துடன், மணலி விரைவு சாலையில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் ஆர்ப்பரித்தது. இதனால், அவ்வழியே போக்குவரத்து பாதித்தது. குறிப்பாக, 6, 7 ஆகிய வார்டுகளின் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி பகிங்ஹாம் கால்வாயின் பக்கவாட்டில், 'பொக்லைன்' இயந்திரங்கள் இறங்குவதற்கான வழித்தடம் வழியாகவும், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
தற்போது, சத்தியமூர்த்தி நகர், 8, 9 ஆகிய தெருக்களில் இருந்து, பகிங்ஹாம் கால்வாயுடன் இணையும் வகையில், பிரதான கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதில், மதகுகள் அமைப்பதற்கான கட்டமைப்பு இருப்பது போல் தெரியவில்லை.
எண்ணுார் - திருவொற்றியூர் குப்பை மேடு வரையில், ஊருக்குள் இருந்து பகிங்ஹாம் கால்வாயுடன் இணையும் பிரதான கால்வாய்களுக்கு, பருவமழை காலத்திற்குள் ஆராய்ந்து மதகுகள் அமைக்க வேண்டும்.
பகிங்ஹாம் கால்வாயை பொறுத்தவரை, வினாடிக்கு 5,000 கன அடி உபரி நீர் செல்ல முடியும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதை கவனத்தில் வைத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
இதை தவிர்த்து, மின் மோட்டார்கள் மற்றும் மணல் மூட்டைகளை நம்பி இந்த பருவமழையை எதிர்கொண்டால், திருவொற்றியூர் மேற்கு தப்புமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பருவமழை காலத்தை நினைத்து, பகுதிவாசிகளும் அச்சத்தில் உள்ளனர்.
பகிங்ஹாம் கால்வாயுடன் இணையும் பிரதான கால்வாய்களுக்கு மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன. மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் விடுபட்ட இடங்களில் மதகுகள் அமைக்கும் பணி, செப்டம்பர் மாதத்திற்குள் முடியும்.
- மாநகராட்சி அதிகாரி.

