நத்தம் நிலங்களில் அடுக்குமாடிக்கு அனுமதி: அரசின் தவறான போக்கு என குற்றச்சாட்டு
நத்தம் நிலங்களில் அடுக்குமாடிக்கு அனுமதி: அரசின் தவறான போக்கு என குற்றச்சாட்டு
UPDATED : மே 30, 2024 06:05 AM
ADDED : மே 30, 2024 01:46 AM

தோராய பட்டா வழங்கப்பட்ட கிராம நத்தம் நிலங்களில், அடுக்குமாடி கட்டும் திட்டங்களை அனுமதிக்கும் வகையில், விதிகளில் திருத்தம் செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அரசின் இந்த முயற்சி தவறான போக்கு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில், கிராமங்களில் குடியிருப்பு பயன்பாட்டுக்காக நத்தம் நிலங்கள் பராமரிக்கப் படுகின்றன. இவற்றில் வீடுகள் மட்டுமே கட்ட முடியும்; முறையான பட்டா இல்லாததால், கட்டுமான திட்டங்களை செயல்படுத்த முடிவதில்லை.
இதனால், நத்தம் நிலங்களில் வசிப்போருக்கு தோராய பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பட்டா வழங்கப்பட்ட நிலங்களையும், நத்தம் என தனியாக வகைபடுத்தியே, வருவாய் துறை நிர்வகித்து வருகிறது.
பட்டா கிடைத்ததால், அதன் உரிமையாளர்கள் கான்கிரீட் வீடுகள் கட்ட உள்ளாட்சிகளில் ஒப்புதல் பெறுகின்றனர். ஆனால், நகர்ப்புறங்களில் இதுபோன்ற கிராம நத்தம் நிலங்களில், அடுக்குமாடி திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. வழக்கமான நிலங்களுக்கு இருப்பது போன்று, இங்கும் முழுமையான தளப்பரப்பு குறியீடான எப்.எஸ்.ஐ., அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
கட்டுமான விதிகளில், இதற்கான தளர்வுகள் வழங்கப்பட்டால், நத்தம் நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்தலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில், விதிகளை திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு துவக்கியுள்ளது.
விதிகளில் திருத்தம்
இதுகுறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தோராய பட்டா, நிரந்தர பட்டா வழங்கப்பட்ட நத்தம் நிலங்கள் தனித்து பார்க்கப்படுகின்றன. வழக்கமான நிலங்களில் அனுமதிப்பது போன்று, இதிலும் அடுக்குமாடி கட்டடம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எந்த அடிப்படையில், இதற்கான வழிமுறை களை வகுப்பது என, ஆலோசித்து வருகிறோம். விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விதிமீறல் அதிகரிக்கும்
தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: பட்டா வழங்கப்பட்ட நிலையில், வழக்கமான நிலங்களுக்கான தகுதியை நத்தம் நிலங்களும் பெற்று விடுகின்றன. இதில், குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த அனுமதிப்பதில் தவறு இல்லை.
ஆனால், வணிக நோக்கிலான வளர்ச்சி ஏற்படும் போது, அதை தடுப்பது இயலாத காரியம். இதற்கு தனியாக கட்டுப்பாடுகள் விதித்தால், சிலர் அதை வேண்டுமென்றே மீறுவதற்கு வழி வகுக்கும்.
இத்தகைய விதிமீறல்கள் நடந்தால், அதை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கான சரியான அமைப்புகள் இல்லாததால், விதிமீறல் புகார்கள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நிலத்தின் அடிப்படை தன்மை மாறிவிடும்
கிராம நத்தம் நிலங்கள் குடியிருப்பு பயன்பாட்டுக்காக மட்டுமே என்று தான் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இதுவரை, இதன் அடிப்படையிலேயே அரசின் செயல்பாடுகளும் இருந்துள்ளன. இங்கு அடுக்குமாடி போன்ற வளர்ச்சி திட்டங்கள் வந்தால், இந்த நிலத்தின் அடிப்படை தன்மை மாறிவிடும். பட்டா வழங்கப்பட்டதாலேயே, இது வழக்கமான நிலமாகிவிடும் என்றால், குடியிருப்புக்கு என்ற தனி ஒதுக்கீடு எதிர்காலத்தில் இருக்காது.
- பி.விஸ்வநாதன்
சமூக ஆர்வலர்
- நமது நிருபர் -