உளவுத்துறை அறிக்கையால் ஆளுங்கட்சி 'ஷாக்' சிறுவாணியில நிறைய தண்ணியிருக்குன்னு ஜோக்!
உளவுத்துறை அறிக்கையால் ஆளுங்கட்சி 'ஷாக்' சிறுவாணியில நிறைய தண்ணியிருக்குன்னு ஜோக்!
UPDATED : ஏப் 02, 2024 11:03 AM
ADDED : ஏப் 02, 2024 12:46 AM

கணபதியில் உள்ள பேக்கரி ஒன்றில் சித்ராவும், மித்ராவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அவ்வழியாக, ஒரு வேட்பாளர், தேர்தல் பரப்புரை சென்று கொண்டிருந்தார். கடை கடையாக சென்று கட்சியினர் நோட்டீஸ் வினியோகித்தனர்.
''என்னப்பா, தேர்தல் களம் களைகட்டியிருச்சு போலிருக்கே,'' என, ஆரம்பித்தாள் சித்ரா.
''ஆமாக்கா, தேர்தல் களம் ரொம்பவே சூடா இருக்கு. ஆனா, கட்சிக்காரங்களை திரட்ட முடியறதில்லையாம். அதனால, தலைக்கு, 200 ரூபாய் பேசி, சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை அழைச்சிட்டுவர்றாங்களாம். வீடு வீடா போயி, 'டோர் கேன்வாசிங்' செய்றதுக்கு, ஒருத்தருக்கு, 200-300 ரூபாய் கொடுக்குறாங்களாம்,''
பகீர் 'ரிப்போர்ட்'
''இப்பவே... பட்டுவாடா ஆரம்பிச்சிட்டதா சொல்றாங்களே..''
''ஆமா, மித்து! பா.ஜ., தரப்புல அண்ணாமலையே நிக்கிறதுனால, அவ்ளோ ஈசியா ஜெயிக்க முடியாதுன்னு உளவுத்துறையில இருந்து, 'ரிப்போர்ட்' போயிருக்காம்.
புது வாக்காளர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், நடுநிலை வாக்காளர்கள் பலரும் அண்ணாமலையை விரும்புறாங்க; அவருடைய செயல், பேச்சு இளம் வாக்காளர்களை ரொம்பவே ஈர்த்திருக்கு.
ஓட்டுக்கு பணம் தர மாட்டேன்னு, முதல்நாளிலேயே 'தில்'லா பேட்டி கொடுத்ததை, கோவை மக்கள் ரொம்பவே வரவேற்கிறாங்க. அதனால, தி.மு.க., தரப்புல இன்னமும் மெனக்கெடனும்னு, உளவுத்துறையில இருந்து நாசூக்கா சொல்லியிருக்காங்களாம்,''
''இதை கேள்விப்பட்டு ஆளுங்கட்சி தரப்பு ஆடிப் போயிருச்சாம்... வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தப்போ... 'யாருக்கு கூட்டம் ஜாஸ்தி'ன்னு, ஆபீசர் ஒருத்தரிடம், தி.மு.க., 'பொறுப்பு' காதை கடித்திருக்கிறார். அவரோ, நமட்டுச் சிரிப்புடன் நழுவியிருக்கிறாரு. அறிக்கையின் சாராம்சம் தெரிஞ்சதும், ஓட்டுக்கு பணம் கொடுக்கற வேலையை ஆரம்பிச்சிட்டாங்களாம்,''
''இப்போதைக்கு, கண்டிப்பா ஓட்டுப்போடுவாங்கன்னு தெரியுற வாக்காளர்களுக்கு மட்டும் டோக்கன் அட்வான்ஸ் மாதிரி, 500 ரூபாயை உடன்பிறப்புகள் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதெல்லாம் தெரியாம, அப்பாவி வியாபாரிகள்கிட்ட பறக்கும் படை அதிகாரிங்க பணத்தை பறிமுதல் செஞ்சிட்டு இருக்காங்க. நேர்மையா, நியாயமா தேர்தல் நடக்கணும்னா, தேர்தல் பிரிவினர் இன்னும் விழிப்போடு செயல்படனும்னு சொல்றாங்க,''
அஞ்சாயிரம் பட்டுவாடா
''தி.மு.க., பிரசாரம் செய்றது தெரியுது; பா.ஜ., தரப்புல அண்ணாமலை குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்குது; அ.தி.மு.க., தரப்புல 'சவுண்ட்'டே காணோமே...''
''ஆமாப்பா... உண்மைதான்! மேடையில பேசும்போது மட்டும் தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் தான் போட்டின்னு சொல்றாங்க. ஆனா, அண்ணா மலையை மட்டும் தாக்கிப் பேசுறாங்க.
அ.தி.மு.க.,வை சேர்ந்த 'மாஜி', கொஞ்ச நாளா ஏரியாவுக்குள்ளேயே காணோம். நாலு தொகுதிக்கு பொறுப்பாளரா நியமிச்சிருக்கிறதுனால, பக்கத்து தொகுதிக்கு போயிட்டாராம்...
அ.தி.மு.க., தரப்புல பிரசாரம் இன்னும் சூடுபிடிக்கலை. வேட்பாளர் தனியா ஒரு பக்கமும், எம்.எல்.ஏ.,க்கள் தனியா ஒரு பக்கமும், நோட்டீஸ் வினியோகம் செய்றாங்க,''
''பூத் கமிட்டிக்கு முதல்கட்டமா, அஞ்சாயிரம் ரூபா பட்டுவாடா செஞ்சிருக்காங்க. இதெல்லாம் எந்த மூலைக்கு; ரெண்டே நாள்ல செலவாகிடுமேன்னு சொல்லி, ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பியிருக்காங்க. இரண்டாம் கட்டமா மறுபடியும், அஞ்சாயிரம் தர்றதா உறுதி சொல்லியிருக்காங்களாம். ஆனா, தேர்தல் களத்துல தி.மு.க.,வா, அண்ணாமலையான்னு தான் போட்டி கடுமையா இருக்கு,''
பா.ஜ., பக்கம் தாவல்
''அ.தி.மு.க.,வுல இருக்கற அதிருப்தியாளர்கள் பலரும், பா.ஜ., பக்கம் தாவுறதா கேள்விப்பட்டேனே... உண்மையாக்கா...''
''நீ கேள்விப்பட்டது, கரெக்ட்டுதான், மித்து! காரமடையை சேர்ந்த அதிருப்தியாளர்களை பா.ஜ., அவுங்க பக்கம் இழுத்துட்டு இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, காரமடை நகராட்சியில நான்கு வார்டுகளை சேர்ந்த அ.தி.மு.க.,வினர், மத்திய இணை அமைச்சர் முருகன் முன்னிலையில பா.ஜ.,வுல சேர்ந்தாங்க,''
''இதே மாதிரி, மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில இருக்கற, தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., கட்சிகள்ல இருக்கற, அதிருப்தியாளர்களை இழுக்கறதுக்கு, தாமரைக்கட்சிக்காரங்க 'டீல்' பேசிட்டு இருக்காங்க,''
தலைமைக்கு புகார்
''நீலகிரி தி.மு.க., வேட்பாளர் ராஜா, காரமடையில பிரசாரம் செய்றதுக்கு வந்தப்போ, கூட்டம் இல்லாததால, ரொம்பவே அப்செட் ஆயிட்டாராமே...''
''ஆமாப்பா... கூட்டம் ரொம்பவும் குறைவா இருந்துச்சு. நகர்ப்பகுதியில தானே நமக்கு ஓட்டு ஜாஸ்தி; ஏன் கூட்டம் திரட்டலைன்னு கேட்டிருக்காங்க. கட்சி நிர்வாகி சரியா செயல்படலைன்னு, தலைமைக்கு கம்ப்ளைன்ட் போயிருக்காம்,''
''இதே மாதிரி, மேட்டுப்பாளையத்துல பூத் கமிட்டிக்கு கொடுத்த பணம், கட்சிக்காரங்களுக்கு கரெக்டா போயி சேரலையாம். இதை கேள்விப்பட்டதும், தலைமையில இருந்து 'என்கொயரி' பண்ணியிருக்காங்க. கட்சிக்காரங்களுக்கு ஒழுக்கமா பட்டுவாடா செய்யலைன்னா, வேறு விதமான நடவடிக்கை பாயும்னு, 'வார்னிங்' செஞ்சிருக்காங்களாம்,''
வரப்போகுது ரெய்டு
''தேர்தல் நேரத்துல ஆளுங்கட்சியை சேர்ந்தவருக்கு, ரெய்டு நடக்கும்னு சொல்றாங்களே... உண்மையா...''
''ரோடு போடுற துறையின், வி.ஐ.பி.,க்கு நம்மூர்ல ஒரு பினாமி இருக்காரு. கொங்கு மண்டலத்துல ரோடு கான்ட்ராக்ட், டெண்டர், டிரான்ஸ்பர்னு எல்லா விவகாரங்களையும் பினாமிதான் கவனிக்கிறாராம்,''
''திருவண்ணாமலையில இருந்து வந்து, நம்மூர்ல 'செட்டில்' ஆன பினாமிக்கும், திருவண்ணாமலையில் இருக்கிற பினாமிக்கும் இடையில, மோதல் நடந்திருக்கு. மலைக்காரரை பற்றி, ஐ.டி., டிபார்ட்மென்ட்டுக்கு போட்டுக் கொடுத்திருக்காராம். ரெண்டு நாளைக்கு முன்னாடி ரெய்டு போயி, பல கோடி ரூபாயை அள்ளி இருக்காங்க,''
''ரெண்டு பினாமிகளுக்குள் நடந்த சண்டையில, ஹைவேஸ் ஆபீசரை சிக்க வச்சிருக்காங்க. அவருடைய ஆபீசில இருந்தும், 10 கோடி ரூபாய் சிக்கியிருக்கு.
மலையான ஊர்ல இருக்கற, பினாமிகிட்ட நடத்துன விசாரணையில, நம்மூர் பினாமியை பத்தியும், துறையின் வி.ஐ.பி., பத்தியும் போட்டுக் கொடுத்துட்டாராம்; அதனால, ரெய்டு நடத்தி, மூட்டை மூட்டையா பணத்தை அள்ளுறதுக்கு, வாய்ப்பிருக்குன்னு ஆளுங்கட்சி பினாமிகள் வட்டாரத்துல தகவல் பரவிட்டு இருக்கு,''
கல்லா நிறையுது
''ஸ்டேஷன் ஐ.எஸ்.,ன்னு சொல்லி, ஒரு ஏட்டு கடை கடையாய் போயி, கல்லா கட்டுறாராமே...''
''அதுா... சிட்டி போலீஸ்ல ஸ்டேஷன் ஐ.எஸ்.,ங்கிற பிரிவையே கலைச்சிட்டாங்க. இருந்தாலும், செல்வபுரம் ஸ்டேஷன்ல இருக்கற ஏட்டு ஒருத்தரு, ஸ்டேஷன் ஐ.எஸ்.,ன்னு சொல்லி, வசூல்ல பட்டைய கிளப்புறாரு,''
''ஸ்டேஷன் இன்ஸ்.,க்கும் பங்கு கொடுக்கறதுனால, அவரு கண்டுக்கறதில்லையாம். ஸ்டேஷனுக்கு யாரு புகார் கொடுக்க வந்தாலும், ரெண்டு தரப்புல கரன்சி கட்டுகளை, எந்த தரப்புல அள்ளி வீசுறாங்களோ, அவுங்களுக்கு சாதகமா வழக்கு பைல் பண்றாங்களாம்,''
வாக்குறுதி என்னாச்சு
''சிறுவாணி டேம்ல போதுமான அளவு தண்ணீ இருக்குன்னு குடிநீர் வாரியம் விளக்கம் கொடுத்திருக்கே... ஏதாச்சும் பின்னணி இருக்குதா...''
''நம்மூர்க்கு தண்ணீர் எடுக்குற சிறுவாணி டேம்லயும் போதுமான தண்ணீ இல்லை; பில்லுார் டேம்லயும் போதுமான தண்ணீ இல்ல; இது, ஊருக்கே தெரியும். 15 நாளைக்கு ஒரு தடவை தான் சப்ளை செய்றாங்க... இதனால... எலக்சன்ல பாதிப்பு வருமோன்னு, ஆபீசர்ஸ் பலரும் ஆதங்கப்படுறாங்க...''
''உடனே, சென்னையில இருந்து நம்மூருக்கு நேர்ல வந்து பில்லுார் டேமுக்கு போயி பார்த்துருக்காங்க. மேலதிகாரிங்ககிட்ட பேசுறோம்னு சொல்லிட்டு போனாங்க; பேசுன மாதிரி தெரியலை. ஆனா, டேமுல தண்ணீ போதுமான அளவு இருக்குன்னு, ஸ்டேட்மென்ட் மட்டும் விட்டுருக்காங்க,''
''தண்ணீ இருக்குன்னா, வ.உ.சி., மைதானத்துல நடந்த மீட்டிங்ல, சி.எம்., ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தா மாதிரி, ரெண்டு நாளைக்கு ஒரு தடவை கொடுக்கச் சொல்லுங்கன்னு, ஏ.டி.எம்.கே.,காரங்க கிண்டல் அடிக்கிறாங்க. இப்போ, பில்லுார்-3 திட்டத்தை அவசரப்பட்டு துவக்கி வச்சு, சிக்கிக்கிட்டோமோன்னு, குடிநீர் வாரியத்துக்காரங்க புலம்பிட்டு இருக்காங்க,''
கல்வித்துறையில் புகைச்சல்
''சீனியர்களை ஓரங்கட்டிட்டு, ஜூனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததால, எஜூகேசன் டிபார்ட்மென்ட்டுல, புகைச்சல் ஓடிட்டு இருக்குதாமே...''
''ஆமா, மித்து! நீ கேள்விப்பட்டது உண்மைதான். பிளஸ் 1, பிளஸ் 2 எக்சாம் பேப்பர் திருத்துற வேலையை ஆரம்பிச்சிட்டாங்க. இதுல, பேப்பர் திருத்துற வேலையில ஜூனியர்களையும், சரிபார்க்குற வேலையில சீனியர்களையும், நியமிக்கிறது வழக்கம்,''
''ஆனா, நம்மூர்ல, பணிமூப்புல ஜூனியர்களா இருக்கற, குறிப்பிட்ட சங்கத்தை சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை, மதிப்பெண் சரிபார்க்குற அலுவலர்களா நியமிச்சிருக்காங்களாம். இது, அரசு தேர்வுத்துறை விதிமுறைக்கு முரணானதாம்,''.
-பேசிக்கொண்டே, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள் சித்ரா.

