காமராஜர் ஆட்சியா... கட்சி வளர்ச்சியா? காங்., பிரமுகர் பேச்சால் குஸ்தி
காமராஜர் ஆட்சியா... கட்சி வளர்ச்சியா? காங்., பிரமுகர் பேச்சால் குஸ்தி
ADDED : ஆக 09, 2024 12:55 AM

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் இருவர் இடையே ஏற்பட்ட மோதல் போக்கால், அக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சென்னை எழும்பூரில் நடந்தது.
முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி., ஆரூண், டி.செல்வம், சொர்ணா சேதுராமன், ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் பேசியதாவது:
காமராஜர் ஆட்சி நோக்கி செல்கிறோமா அல்லது கட்சி வளர்ச்சி நோக்கி செல்கிறோமா என்பது குறித்த அறிவுரையை தெரிவிக்க வேண்டும்.
'இண்டி' கூட்டணி பலமாக இருப்பதால், காமராஜர் ஆட்சி சாத்தியமா என்பது தெரியவில்லை. கட்சி வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் இருக்கிறது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிர்வாகிகளால் தான், கட்சி எழுச்சியாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக தன்னார்வத்துடன் செயல்பட்டு, கட்சி பணியாற்றி வருபவர்களால், கவுன்சிலராகக் கூட முடியவில்லை.
அந்த நிர்வாகிகளின் உழைப்பு காரணமாக, 10 எம்.பி.,க்கள், 25 எம்.எல்.ஏ.,க்கள், 15 கவுன்சிலர் சீட்டுகளை வாங்குகிறோம்.
அதை அறுவடை செய்பவர்கள், கட்சிக்கு உழைத்த நிர்வாகிகளுக்கு எந்த உதவியும் செய்ய முன்வருவதில்லை; அவர்களை கண்டுகொள்வதும் இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரஞ்சன்குமார் இப்படி பேசும்போது, பேச்சை நிறுத்தும்படி, மேடையில் இருந்த மாநில நிர்வாகி ஒருவர் கூறினார். அதற்கு ரஞ்சன்குமார், எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது.
மேடையில் அமர்ந்திருந்த கோஷ்டி தலைவர்கள், இரு தரப்பினரையும் சமரசப்படுத்திய பின் மீண்டும் கூட்டம் நடந்தது.
டில்லி பயணம்
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நேற்று டில்லி சென்றார். பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கட்சி தலைவர் கார்கே, மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
சென்னை, திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிப்பதற்கான பட்டியலுக்கு ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளார்.
- நமது நிருபர் -