24 - 26 டிகிரியில் 'ஏசி'யை வையுங்க... 36% சதவீத மின் கட்டணம் மிச்சமாகும்
24 - 26 டிகிரியில் 'ஏசி'யை வையுங்க... 36% சதவீத மின் கட்டணம் மிச்சமாகும்
UPDATED : மே 10, 2024 06:36 AM
ADDED : மே 10, 2024 04:32 AM

சென்னை: தமிழகத்தில் மார்ச் முதல் கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால், வீடு, அலுவலகங்களில், 'ஏசி' சாதனத்தின் பயன்பாடு அதிகரித்தது. நாளுக்கு நாள் வெயிலின் வெப்ப அலை கடுமையாக இருந்தது.
இதனால், வீடுகளில் இரவில் மட்டுமின்றி பகலிலும் ஏசி சாதனத்தை பயன்படுத்தி வருகின்றனர். வெப்பத்தை தணிக்க, ஏசி சாதனம் இல்லாத வீடுகளிலும் புதிதாக வாங்கி வருகின்றனர்.
'மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வந்ததற்கு, ஏசி சாதன பயன்பாடே முக்கிய காரணம்' என, மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு டன் திறன் உடைய ஏசி சாதனம், ஒரு மணி நேரம் இயங்கினால், 1 யூனிட் மின்சாரம் செலவாகிறது. இது, 1.50 டன் திறன் உடைய ஏசி சாதனத்தில், 1.50 யூனிட் செலவாகிறது.
பலரும் விரைவில் குளர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஏசி சாதனத்தில், 18 'டிகிரி' செல்ஷியசை பயன்படுத்துகின்றனர். வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரிப்பால், பலருக்கும் மின் கட்டணம் அதிகம் வரும்.
இதுகுறித்து, மின்வாரியம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள விபரத்தில், 'ஏசி சாதனத்தை, 24 - 26 டிகிரி செல்ஷியசில் வைப்பதன் வாயிலாக, 36 சதவீதம் மின் கட்டணம் சேமிக்கலாம். இன்றே உறுதி செய்திடுங்கள்; பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.