முரண்டு பிடிக்கும் கேரளா; தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி
முரண்டு பிடிக்கும் கேரளா; தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி
UPDATED : ஜூலை 20, 2024 04:27 AM
ADDED : ஜூலை 20, 2024 04:23 AM

கோவை : கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான, சிறுவாணி அணையின் முழு கொள்ளளவான, 50 அடிக்கு தண்ணீர் தேக்காமல், மதகை திறந்து, 1,000 கனஅடி தண்ணீரை கேரள அரசு திறந்து விட்டுள்ளது. இது, தமிழக அரசு அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு, குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள மாநில அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. அம்மாநில நீர்ப்பாசனத்துறை பராமரிக்கிறது.
இரு மாநில ஒப்பந்தப்படி, நாளொன்றுக்கு, 10.1 கோடி லிட்டர் தண்ணீர், கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அணையின் இருப்புக்கேற்ப, தண்ணீர் எடுக்கப்படுகிறது.
வழக்கமாக, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில், சிறுவாணி அணை நிரம்பி வழியும். உபரி நீர் காட்டுவழிப்பாதை வழியாக மலை முகடுகளில் வழிந்தோடி பில்லுார் அணைக்கு வந்தடையும். அணையின் மொத்த உயரம், 50 அடி. கடந்த சில ஆண்டுகளாக, பாதுகாப்பு காரணங்களை கூறி, 5 அடி குறைவாக, 45 அடிக்கு மட்டுமே கேரள அரசு தண்ணீர் தேக்குகிறது.
ஐந்தடி குறைவாக நீர் தேக்குவதால், கோடை காலங்களில் கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதை சுட்டிக்காட்டி, முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க வேண்டுமென, கேரள அரசிடம், தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், மழை பெய்யும்போது, பாதுகாப்பு காரணங்களை கூறி, மதகை திறந்து, தண்ணீரை வெளியேற்றுவதை கேரள அதிகாரிகள் தொடர்ச்சியாக செய்கின்றனர்.
இச்சூழலில், கடந்த சில நாட்களாக, சிறுவாணியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால், அணையின் உயரம் மெல்ல மெல்ல உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம், 40.54 அடியாக நீர் மட்டம் இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, நீர் பிடிப்பு பகுதியில், 4.7 செ.மீ., அடிவாரத்தில், 2.7 செ.மீ., மழை பதிவானது. இதன் காரணமாக, 42 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக, 9.47 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.
கன மழை தொடரும் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததால், கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், சிறுவாணி அணைக்கு விரைந்து சென்று, மதகை திறந்து 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றினர்.
கோவைக்கு தண்ணீர் எடுக்கப்படும், நீர்புகு கிணற்றில் நான்கு வால்வுகள் உள்ளன. இதில், மூன்று வால்வுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன; 45 அடிக்கு தண்ணீர் தேக்கினால், நான்கு வால்வும் தண்ணீருக்குள் மூழ்கும்.
ஆனால், நான்காவது வால்வு இன்னும் மூழ்கவில்லை; அதற்குள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான, 50 அடிக்கு மழை நீரை தேக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இருந்தாலும், கேரள அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, 45 அடிக்கு நீர் மட்டம் உயர்வதற்கு முன்பாகவே, மதகை திறந்து, தண்ணீரை கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகள் வெளியேற்றியதால், தமிழக அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.