குடிசையில் வாழ்க்கை! வீடு கேட்டு நடையாய் நடக்கும் பழங்குடிகள் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை
குடிசையில் வாழ்க்கை! வீடு கேட்டு நடையாய் நடக்கும் பழங்குடிகள் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை
UPDATED : செப் 28, 2024 05:20 AM
ADDED : செப் 27, 2024 11:52 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே கிளன்ராக் பழங்குடியின மக்கள் தங்களின் குடிசைக்கு மாற்றாக, வீடு கட்டித்தர கோரி நடையாய் நடந்தும் இதுவரை கிடைக்கவில்லை.
பந்தலுாரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் கிளன்ராக் பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த, 16- குடும்பத்தினர் இங்கு வசித்து வந்த நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாததால், ஏழு குடும்பத்தினர், அருகில் உள்ள கேரளா மற்றும் பந்தலுாரை ஒட்டிய பழங்குடியின கிராமங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். ஒன்பது குடும்பத்தினர் மட்டும் இங்கு வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலையில், கரடு முரடான வனப்பகுதி சாலையில் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாது. இதனால், இங்கு வாழும் மக்கள் நடந்து வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி, கிராமத்திற்கு திரும்பி செல்கின்றனர்.
அவசர தேவைகளுக்கு, பந்தலுார் பகுதியில் உள்ள ஒரு ஜீப் மட்டுமே இந்த பகுதிக்கு சென்று வரும் நிலையில், கூடுதலான வாடகையை செலுத்த வேண்டிய சூழலில், இதற்கும் வழி இல்லாமல் சிரமப்பட்டு போகின்றனர்.
மழை காலத்தில் அச்சம்
தற்போது, மழை பெய்து வரும் நிலையில் குடிசை வீடுகள், எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால், தங்களுக்கு நெல்லியாளம் நகராட்சி வீடுகள் கட்டி தர வேண்டும் என, வலியுறுத்தி மனுப்போர் நடத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லாத நிலையில் கட்டுமான பொருட்களை, கொண்டு செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும், வீடுகள் கட்டுவதற்கு எந்த ஒப்பந்ததாரர்களும் முன்வராததால், இவர்களின் வாழ்க்கை குடிசையில் நடந்து வருகிறது.
ஏற்கனவே, பந்தலுாரில் இருந்து பழங்குடியின கிராமம் வரை சாலை அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பணிக்கு யாரும் வராததால், நிதி அது திரும்ப பெறப்பட்டது.
மீண்டும் வீடு கேட்டு மனு
இந்நிலையில், கிராமத்தை சேர்ந்த மக்கள் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம், 'தங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும்; சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்,' எனக்கூறி மனுக்களை அளித்தனர்.
கிராமத்தை சேர்ந்த சரோஜா கூறுகையில், ''தேர்தலின் போது எங்கள் கடமையை நடந்து வந்தாவது நிறைவேற்றி செல்கிறோம். ஆனால், தேர்தல் முடிந்ததும் எங்களை யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை. சாலை வசதி இல்லாத நிலையில் சிரமப்பட்டு வரும் நாங்கள், தற்போது வீடுகள் இல்லாமல் பரிதவித்து வருகிறோம்.
மாவட்ட கலெக்டர் இது குறித்து ஆய்வு செய்து சாலை மற்றும் குடியிருப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட கிழக்கு பருவ மழையின் போது எங்கள் பகுதியில் குடிசைகள் பாதிக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
நகராட்சி கமிஷனர் முனியப்பன் கூறுகையில். ''வீடு கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சாலை நகராட்சி நிதியில் அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.