'நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்தது நீதி பரிபாலன முறையில் குறுக்கிடும் செயல்'
'நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்தது நீதி பரிபாலன முறையில் குறுக்கிடும் செயல்'
UPDATED : மே 28, 2024 09:14 AM
ADDED : மே 28, 2024 07:36 AM

சென்னை: நீதிபதியை நேரில் சந்தித்து, சவுக்கு சங்கர் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது, நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவதாகும் என்பதால், அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 'யு டியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவுப்படி, கைது தொடர்பான ஆவணங்களை அரசு தாக்கல் செய்தது.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், 'அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்; அதன்பின், இந்த வழக்கை இறுதியாக விசாரிக்க வேண்டும்' என, நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். வெவ்வேறான உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு, இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை, உடனடியாக விசாரணைக்கு எடுத்தது குறித்து, நீதிபதி சுவாமிநாதன் தன் உத்தரவில், 'மேல் மட்டத்தில் உள்ள இருவர், என்னை நேரில் சந்தித்தனர். தகுதி அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க, அவர்கள் விரும்பவில்லை. 'அவர்கள் என்னிடம் பேசி அழுத்தம் கொடுத்திருக்காவிட்டால், அட்வகேட் ஜெனரல் கூறியபடி, வழக்கமான நடைமுறையை பின்பற்றியிருப்பேன். வழக்கை விசாரணைக்கு ஏற்று, நோட்டீஸ் பிறப்பித்திருந்தால், என்னை சந்தித்தவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கும்.
'மேலும், ரிட் விதிமுறைகள் எதையும், நான் மீறவில்லை. ஆவணங்களை பார்த்த மாத்திரத்தில், சட்டவிரோத உத்தரவு என தெரியும்பட்சத்தில், அதை ரத்து செய்யலாம்' என கூறியுள்ளார்.
இந்நிலையில், நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்தவர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு அனுப்பி உள்ளார்.
அதில் 'நீதிபதியை சந்தித்த இருவருக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். அவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். அதற்காக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார். ''நீதிபதியை நேரில் சந்தித்து, அழுத்தம் கொடுத்த செயல், நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவது போலாகும் என்பதால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமனும் கூறியுள்ளார்.
இது குறித்து, முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியதாவது: குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட, 15க்கும் மேற்பட்ட வழக்குகளில், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கை மட்டும் விசாரணைக்கு எடுத்தது குறித்து, நீதிபதி பதில் அளித்துள்ளார்.
மேல் மட்டத்தில் உள்ள இருவர் தன்னை சந்தித்ததாக, நீதிபதி கூறியுள்ளார். இந்த செயல், நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவது போலாகும்; நீதிமன்ற அவமதிப்பும் ஆகும். நீதிபதி தங்கி இருக்கும் இடத்தில், பாதுகாப்பு போலீசார் இருப்பர். நீதிமன்றத்தில் உள்ள அறை என்றால், உதவியாளர்கள் இருப்பர். அதனால், தன்னை சந்திக்க வந்தவர்களை, அங்கேயே பிடித்து கொடுத்திருக்கலாம்.
நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவதாக தான், சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து தண்டனை வழங்கினார். அப்படி இருக்கும்போது, இந்த இருவருக்கு எதிராகவும், அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
அவகாசம்
பொதுவாக, ஆட்கொணர்வு வழக்கில், அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் வழங்கப்படும். இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரலும், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளார். மற்றொரு நீதிபதி பாலாஜியும், பதில் அளிக்க அரசை அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கள்ளச்சாராய வழக்குகளில், குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கும்போது, அதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த அமர்வில், நானும் இருந்துள்ளேன். விசாரணைக்கு வந்த நிலையில், குண்டர் சட்ட கைதை ரத்தும் செய்துள்ளோம். ஆனால், அரசு வழக்கறிஞர், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டால், அவகாசம் அளித்து தான் விசாரித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.