மோடி வருகையால் தமிழகத்தில் பா.ஜ., அலை...! தேர்தலில் அமோக வெற்றி நிச்சயம்
மோடி வருகையால் தமிழகத்தில் பா.ஜ., அலை...! தேர்தலில் அமோக வெற்றி நிச்சயம்
ADDED : ஏப் 14, 2024 04:45 AM

மத்திய இணை அமைச்சராக உள்ள முருகன், நீலகிரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். பட்டியல் பிரிவினர், பழங்குடியினர் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்காக உரத்த குரல் கொடுக்கும் இவர், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
நீலகிரி தொகுதியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, மக்களிடையே பிரபலமானது குறித்து?
கடந்த, 2017ல் பட்டியல் பிரிவினருக்கான ஆணையத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்தது முதல், பட்டியல் இன மக்கள், பழங்குடியின மக்களை சந்தித்து, கல்வி, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளுக்கான பல்வேறு பணிகளை செய்துள்ளேன். பா.ஜ., மாநில தலைவராக இருந்தபோது, எங்கள் கட்சியின் சார்பில், கொரோனா காலத்தில் செய்த பணி மக்கள் மனதில் அகலவில்லை.
மாநிலம் முழுவதும் பா.ஜ., அலை எழுந்துள்ளது என்பதை எதை வைத்து கூறுகிறீர்கள்?
நம் பாரத பிரதமர் மோடி அவர்கள், தமிழ் மக்கள் மீதும், கலாசாரம் மீதும் மாறா மதிப்பை வைத்துள்ளார். உலகில் எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகிறார். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' யாத்திரை, மாநிலம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர். அவர்களின் ஆதரவு அலை, எங்களை நோக்கி உள்ளது.
மக்களின் இந்த மாற்றத்திற்கான அலை, ஓட்டுகளாக எவ்வாறு மாறும்?
நீலகிரி தொகுதியை பொறுத்தமட்டில், 52 சதவீதம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். பிரதமர் மோடியின் தலைமைப்பண்பை பிடித்தவர்கள், அனைத்து கட்சியிலும் உள்ளனர். குறிப்பாக, முதல் ஓட்டு போடும் அனைத்து மாணவர்களும், 'தாமரை'க்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டனர். இந்த தேர்தல் தேசிய அரசியலுக்கானது என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.
படுக இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளதா?
படுகர் இன மக்களின் நீண்டகால கோரிக்கையை, மத்திய அரசு கனிவோடு பரிசீலித்து நல்ல முடிவை எடுக்கும். படுகர் மக்களுக்கும் உரிய நீதி கிடைக்கும்.
ஊட்டியில் நலிவடைந்த எச்.பி.எப்., தொழிற்சாலையில், ராமோஜி ராவ் பிலிம் சிட்டி போன்ற படப்பிடிப்பு நகரை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
நீலகிரியில் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில், உயர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய திரைப்பட நகரம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆராயப்படும். திரைப்பட படப்பிடிப்புக்கு பிந்தைய தயாரிப்பு பணிகளான, 'வி.எப்.எக்ஸ், எடிட்டிங், ஆடியோ மிக்சிங், டப்பிங், ஏ.ஐ., தொழில்நுட்பம்' என, உயர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய திரைப்பட நகரம், 'ஷூட் இன் இந்தியா' அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். இதனால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
நீலகிரி தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக, 35 ரூபாய் நிர்ணயிக்கப்படுமா?
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மீண்டும் அமையவுள்ள நரேந்திர மோடி அரசு விரைவாக மேற்கொள்ளும். ராணுவத்துக்கு நீலகிரி தேயிலையை அனுப்ப சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்தும் ஆராயப்படும்.
ஊட்டியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்குமா?
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மீண்டும் மத்தியில் அமையவுள்ள பா.ஜ.,அரசின் சிறப்பு நிதி உதவியுடன், மக்கள் போக்குவரத்து திட்டம் மற்றும் பன்னாட்டு வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டுப்பாளையம் 'பை பாஸ்' திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தால் நிதி ஒதுக்கப்படுமா?
நீலகிரி மக்களின் போக்குவரத்து நெருக்கடியை பூர்த்தி செய்ய மேட்டுப்பாளையம் புறவழி சாலை மிகவும் அவசியமானது. எனவே, ஆட்சி அமைந்தவுடன் மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, அப்பணியை அதிவிரைவாக மேற்கொள்ளும்.
மிகவும் பின் தங்கியுள்ள அவிநாசி, பவானி சாகர் தொகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுமா?
அவிநாசி பகுதியில் வேலைவாய்ப்பை உறுதிபடுத்த ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் பனியன் தொழிற் பூங்கா மற்றும் ஏற்றுமதி மையம் உருவாக்கப்படும். தறியில் நெய்யப்படும் ஜமக்காளத்துக்கு சர்வதேச அளவில் சந்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில், சோலார் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டுப்பாளையம் கறிவேப்பிலைக்கு, 'புவிசார்' குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாசடைந்த பவானி ஆற்றை துாய்மை படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனத்தை குன்னுாரில் அமைக்க முயற்சி எடுப்பீர்களா?
குன்னுாரில், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., அல்லது ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீலகிரி தொகுதி மக்களின் உயர்கல்விக்கான வாய்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளம் பெருக வழிப் பிறக்கும்.
மேட்டுப்பாளையம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சர்வதேச கல்வி நகரம் உருவாக்கப்படுமா?
தேர்தலுக்கு பின், துபாயில் உள்ளது போன்று சர்வதேச கல்வி நகரம், அறிவிசார் பூங்கா, கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற திட்டங்களுக்கு நம் பிரதமர் நிச்சயம் ஆதரவு தருவார்.
- நமது சிறப்பு நிருபர்--

