தமிழகத்தில் மதமாற்றம் அதிகம் நடக்கிறது:: ஆர்.எஸ்.எஸ்., கவலை
தமிழகத்தில் மதமாற்றம் அதிகம் நடக்கிறது:: ஆர்.எஸ்.எஸ்., கவலை
ADDED : செப் 03, 2024 01:31 AM

பாலக்காடு: “தமிழகத்தில் மதமாற்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பது கவலையளிக்கிறது,” என, ஆர்.எஸ்.எஸ்., செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் 'அகில பாரதிய சமன்வே பைதக்' நிகழ்ச்சி நடந்தது. அதன் தலைவர் மோகன் பாகவத், பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்ற மூன்று நாள் நிகழ்ச்சி, நேற்று நிறைவுபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் கூறியதாவது:
தமிழகத்தில் அதிகளவு மதமாற்ற சம்பவங்கள் நடப்பதாக அங்கிருக்கும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். பொதுநல திட்டங்களுக்கு இது அவசியம். அதேசமயம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் இது முக்கியமானது. இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக கையாள வேண்டும். சில சமயங்களில் அரசுக்கு தரவுகள் தேவைப்படுகின்றன. கடந்த காலங்களிலும் இது போன்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டன.
ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகங்கள் மற்றும் ஜாதிகளின் நலனைப் பற்றி பேசுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதை அரசியல் கருவியாகவோ, தேர்தல் பிரசாரத்துக்காகவோ பயன்படுத்தக் கூடாது. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டது கவலையளிக்கிறது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக வங்கதேச அரசுடன், மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.